“பொது சமூகத்தில் இணைந்து திருநங்கைகள் பணியாற்ற பாதையை உருவாக்குகிறோம்” – கவுன்சிலர் கங்கா நாயக் சிறப்புப் பேட்டி.!

வேலூர்: “மக்களும், திருநங்கைகளும் வேறு என்ற மனநிலையிலிருந்து திருநங்கைகள் சமூகம் வெளியே வர வேண்டும். பொது சமூகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். அதற்கான பாதையைதான் என் மாதிரியான மூத்த திருநங்கைகள் உருவாக்கி வருகிறோம். அதற்கு எடுத்துக்காட்டுதான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நான் அடைந்திருக்கும் இந்த வெற்றி” என்கிறார் கங்கா நாயக்.ஜனநாயகத்தின் ஆணி வேர் என்று கருதப்படும் உள்ளாட்சி அமைப்புகளில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. பல சுவாரசியமான, நெகிழ்ச்சியான வெற்றிகளையும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அளித்துள்ளது. அவற்றில் ஒன்றுதான், வேலூர் 37-வது வார்டில் திமுக சார்பில் களம் கண்ட திருநங்கை கங்கா நாயக்கின் வெற்றி. கடந்த 2002-ஆம் ஆண்டு முதல், சுமார் 20 ஆண்டுகளாக திமுகவில் உறுப்பினராக இருக்கும் கங்கா நாயக்கிற்கும் , அவரது திருநங்கை சமூகத்திற்கும் இந்த வெற்றி மிகப் பெரிய நம்பிக்கையை அளித்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து திருநங்கை கங்கா நாயக்கிடம் ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டல் சார்பாக தொடர்புகொண்டு பேசியதிலிருந்து…இந்த வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்..?”நிச்சயம் மன நிறைவான வெற்றியாகப் பார்க்கிறேன். இந்த வெற்றி என் சக திருநங்கை தோழிகள் அரசியலுக்கு வருவதற்கும், மக்களோடு மக்களாக இணைந்து செயல்படுவதற்கும் ஒரு நம்பிக்கையை அளித்திருக்கும் என்று நம்புகிறேன்.”வாக்கு சேகரிப்பின்போது மக்களிடம் வரவேற்பு எப்படி இருந்தது?”நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த வார்டுதான். அதனால் என்னை இப்பகுதி மக்கள் திருநங்கை என்று தனியாகப் பார்க்கவில்லை. அவர்களுள் ஒருத்தியாகவே பார்த்தார்கள். என்னைத் தேர்தலில் நிற்க அவர்கள்தான் ஊக்கமளித்தார்கள். நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையையும் அவர்கள்தான் அளித்தார்கள். அதுவே நடந்திருக்கிறது.”உங்கள் வெற்றி மூலம் திருநங்கை சமூகத்திற்கு நீங்கள் கூறுவது…”மக்களும், திருநங்கைகளும் வேறு என்ற மனநிலையிலிருந்து திருநங்கைகள் சமூகம் வெளியே வர வேண்டும். பொது சமூகத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். அதற்கான பாதையைதான் என் மாதிரியான மூத்த திருநங்கைகள் உருவாக்கி வருகிறோம். அதற்கு எடுத்துக்காட்டுதான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நான் அடைந்திருக்கும் இந்த வெற்றி.”* 37-வது வார்டு மக்களுக்கு நீங்கள் கூறுவது…”அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படைத் தேவைகளையும் நிச்சயம் உடனுகுடன் செய்து கொடுப்பேன் என்ற நம்பிக்கையில்தான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். திருநங்கைகளின் கோரிக்கைகளைக் கேட்டு, அதனையும் நிவர்த்தி செய்வேன். எனது வெற்றி சரியானது என்று எனக்கு வாக்களித்தவர்களைப் பேசவைப்பேன்.”தற்போது கவுன்சிலராகி இருக்கும் காங்கா நாயக்கின் அடுத்த கனவு..”திருநங்கை சமூகம் முன்னேறுவதற்கு, எனது இந்த அரசியல் பயணம் நிச்சயம் நம்பிக்கை அளித்திருக்கும் என்று நம்புகிறேன். சாமானிய மக்களுக்கும் எனது அரசியல் பயணத்தில் என்னால் முடிந்த சேவைகளை செய்து கொடுப்பேன். அனைத்து சமூகத்தினருக்கும் உந்துதல் அளிக்கும் பிம்பமாக மாற வேண்டும் என்பதுதான் என் கனவு.கடந்த சில வருடங்களாகவே திருநங்கை சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மருத்துவர், பொறியாளர், வழக்கறிஞர், போலீஸ் என பல துறைகளில் தங்களது காலடித் தடத்தை திருநங்கைகள் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் ரியா (2020 – உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்) , கங்கா நாயக்கின் இந்த அரசியல் வெற்றி மிகப் பெரும் மாற்றத்தை நோக்கியே பயணமாக மாறியுள்ளது என்றால் மிகையல்ல.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *