
புதுச்சேரி: பூமியான் பேட்டையில் பஸ் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் மூளை சிதறி பரிதாபமாக இறந்துபோனான். புதுவை ரெட்டியார் பாளையம் பவளநகரை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் தள்ளு வண்டியில் வைத்து பாஸ்ட் புட்கடை நடத்திவருகிறார். இவரது மகன் கிஷ்வந்த் (வயது 8). இவன் மூலகுளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவந்தான். பன்னீர் செல்வம் தனது மகனை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். பூமியான் பேட்டையில் ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்ற போது எதிரே ஒருவர் மோட்டார் சைக்கிளில் குறுக்கே பாய்ந்ததால் அவரின் மீது மோதாமல் இருக்க பன்னீர் செல்வம் திடீர் பிரேக் போட்டார். இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வலது புறத்தில் கிஷ்வந்தும் இடது புறத்தில் பன்னீர் செல்வமும் கீழே விழுந்தனர். அந்த நேரத்தில் பின்னால் வந்த தனியார் பஸ் கிஷ்வந்த் மீது மோதியது. இதில் தலை நசுங்கி மூளை சிதறி சம்பவ இடத்திலேயே சிறுவன் கிஷ்வந்த் பரிதாபமாக இறந்து போனான். இது பற்றி தகவல் அறிந்ததும். வடக்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி அறிந்த போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். தந்தை கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவன் மூளை சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.பன்னீர் செல்வத்துக்கு ஏற்கனவே 3 மகள்கள் உள்ளனர். ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பிய பன்னீர் செல்வம் அதற்காக செயற்கை கருவூற்றல் மூலம் கிஷ்வந்த் பிறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தேங்காய்திட்டு மரப்பாலத்தில் இருந்து தனியார் மருத்துவக் கல்லூரி பஸ் ஒன்று காலாப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்திராகாந்தி சிலை சதுக்கம் அருகே வந்த போது முன்னால் சென்ற கார் திடீரென வலது புறம் திரும்பியதால் கார் மீது மோதாமல் இருக்க கல்லூரி பஸ் டிரைவர் பஸ்ஸை இடது புறம் திருப்பினார். அப்போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையில் மோதி நின்றது. அதிஷ்ட்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.