பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை அரசமைப்புச் சட்டப் பிரிவு 142வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எனினும், காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், “அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை? அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா ? ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா ? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.மேலும், “நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *