பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் குஜராத் சாமியார் அஸ்ரம் பாபு குற்றவாளி – நீதிமன்றம் அதிரடி.!

காந்திநகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த இந்து மத சாமியார் அஸ்ரம் பாபு. 77 வயதான இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளை உள்ளன. சாமியார் அஸ்ரம் பாபு மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. 2013-ம் ஆண்டு ஜோதாப்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் அஸ்ரம் பாபு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக அஸ்ரம் பாபு 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் ஜோத்பூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2018-ம் ஆண்டு அஸ்ரம் பாபு குற்றவாளி என்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனிடையே, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் 2001 முதல் 2006 வரை தான் இருந்த நேரத்தில் சாமியார் அஸ்ரம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பான வழக்கை குஜராத்தின் காந்திநகரில் உள்ள நீதிமன்றம் விசாரித்து வந்தது. பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் அஸ்ரம் பாபு, அவரது மனைவி லட்சுமி, மகன் நாராயன் சாய் சாமியாரின் பக்தைகளாக கூறிக்கொண்ட 4 பெண்களும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். இந்நிலையில், பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் அஸ்ரம் பாபு குற்றவாளி என நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு அளித்தது. மேலும், சாமியாரின் மனைவி, மகன், 4 பெண் பக்தைகளுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய அந்த 6 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் அஸ்ரம் பாபு குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்பட உள்ளது. 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 77 வயதான சாமியார் அஸ்ரம் பாபு ஏற்கனவே ஜோத்பூர் சிறையில் உள்ள நிலையில் மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் அஸ்ரம் பாபு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *