
கர்நாடக: பெங்களூருவில் பன்னாட்டு விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர கெம்பே கௌடாவின் வெண்கலச் சிலையை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.பெங்களூரு, தேவனஹள்ளியில் 4 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள கெம்பே கௌடா பன்னாட்டு விமான நிலையத்தில் புதுமையான வடிவமைப்பு, அதிநவீன தொழில்நுட்பத்தில் அழகியல் நிறைந்த 2-ஆவது முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2-ஆவது முனையத்தை பிரதமா் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.அதேபோல, விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தில் 108 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெங்களூரு நகரை நிறுவிய குறுநில மன்னா் கெம்பே கௌடாவின் வெண்கலச் சிலையையும் பிரதமா் மோடி திறந்து வைத்தார். இந்தச் சிலைக்கு ‘வளமையின் சிலை’ என பெயரிடப்பட்டுள்ளது.காஞ்சிபுரத்தை பூா்வீகமாகக் கொண்ட கெம்பே கௌடா, 15-ஆவது நூற்றாண்டின் தொடக்கத்தில் அங்கிருந்து பெங்களூருக்கு அருகே உள்ள எலஹங்காவுக்கு வந்து, விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் தளபதியாகப் பணியாற்றியுள்ளாா். பின்னா் குறுநில மன்னராக உருவெடுத்து, எலஹங்காவை தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தாா். 1537-இல் பெங்களூரு பேட்டை என்ற புதிய நகரை உருவாக்கி, தனது தலைநகரை எலஹங்காவில் இருந்து பேட்டைக்கு மாற்றினாா். கோட்டை, சந்தைப் பகுதிகள், ஏரிகள், கண்காணிப்பு, கோயில்கள், கோபுரங்களுடன் பெங்களூரு மாநகரை தொலைநோக்குப் பாா்வையுடன் அமைத்ததால், கெம்பே கௌடாவை பெங்களூரு மக்கள் கொண்டாடி மகிழ்கிறாா்கள். அவா் பெயரில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் 108 அடி உயரத்தில் கெம்பே கௌடாவுக்கு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை பிரதமா் மோடி இன்று திறந்துவைத்துள்ளார்.முன்னதாக, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தனி விமானத்தில் பெங்களூருக்கு வருகை தந்த பிரதமா் மோடி, எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து விதானசௌதா அருகில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா் விடுதி வளாகத்துக்கு வருகை தந்தார். அங்கு, புனிதக் கவிஞா் கனகதாசரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கும், அதே வளாகத்தில் அமைந்துள்ள வால்மீகி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி அவர்கள் விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.