புதுச்சேரி அமைச்சர்கள் 30% கமிஷன் வாங்குகிறார்கள்!” – முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு.!!

புதுச்சேரிக்கு நிரந்தர கவர்னர் வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, “புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பொறுப்பு துணைநிலை கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். அதன்படி தமிழிசையும் இங்கு வந்து அவருக்கு இடப்பட்ட வேலையை முடித்தார். அதன்பிறகு தேர்தலின்போது முதல்வர் ரங்கசாமியை மிரட்டி கூட்டணி அமைத்து, காங்கிரஸிலிருந்து விலகி போன 6 பேரை வைத்து பணபலம் மற்றும் அதிகார பலத்துடன் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க 10 இடங்களிலும் வெற்றிபெற்று கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றனர்.முதல்வர் ரங்கசாமி தலையாட்டி பொம்மையாக இருக்கிறார். தற்போது கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் சூப்பர் முதல்வராகவும், ரங்கசாமி டம்மி முதல்வராகவும் இருக்கின்றனர். தேர்தல் சமயத்தில் இவர்கள் பல வாக்குறுதிகளை கொடுத்தார்கள். ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். தேர்தல் பிரசாரத்தின்போது புதுச்சேரியை சிறந்த மாநிலம் மாநிலமாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி சொன்னார். நிதியை வாரி வழங்குவோம், கடனை தள்ளுபடி செய்வோம், மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னார். புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கொடுப்போம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.நான் முதல்வராக இருந்தபோது மத்திய அரசிடமிருந்து 10% நிதியை கூடுதலாக பெற்றேன். ஆனால் இப்போது வெறும் 1.4% நிதியைத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதல்வர் ரங்கசாமியால் பெற முடிந்தது. இதுதான் புதுச்சேரி மாநிலத்தில் அவலநிலை. புதுவையில் ஊழலைத் தவிர வேறு ஒன்றும் நடைபெறவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க அமைச்சர்கள் 40 சதவிகிதம் கமிஷன் வாங்குகிறார்கள், புதுவையில் உள்ள அமைச்சர்கள் 30 சதவிகிதம் கமிஷன் வாங்குகிறார்கள். இரண்டு தரப்புக்கும் இடையே 10 சதவிகிதம் கமிஷன்தான் வித்தியாசம். இப்படிப்பட்ட ஒரு ஊழல் ஆட்சிதான் புதுச்சேரியில் நடந்து கொண்டு இருக்கிறது.இந்த ஆட்சி எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. ரங்கசாமி முதல்வராக நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் நாற்காலியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழிசை சௌந்தரராஜன் சூப்பர் முதல்வராக இருந்து அரசின் அனைத்து நிகழ்வுகளிலும் தலையிட்டு வருகிறார். எதை எதிர்த்து நாங்கள் போராடினோமோ அதை முழுமையாக தமிழிசையிடம் விட்டுவிட்டு சரணாகதி அடைந்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. அதனால் மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு உடனடியாக புதுவைக்கு நிரந்தர கவர்னரை நியமிக்க வேண்டும். தற்போது கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *