புதிய வீட்டுமனைகளை உருவாக்கும்போது மழைநீரை வெளியேற்ற வடிகால் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்.!

சென்னையை அடுத்த தாழம்பூர் அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் ஒட்டியம்பாக்கம் கலங்கல் ஓடை என்ற நீரோடையை அடைத்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இருப்பதால், ஒட்டியம்பாக்கம், மதுரப்பாக்கம் ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் முறையாக வழிந்தோட முடியாமல் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதாக வந்த புகாரை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது.இதுதொடர்பாக நீர்வள ஆதாரத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘சம்பந்தப்பட்ட இடம், வருவாய் ஆவணங்களின்படி பட்டா இடம். அந்த இடத்துக்குள் தான் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. மழை காலங்களில் அங்கு நீர் தேங்குவது வழக்கம். சில தினங்களில் நிலத்தால் நீர் உறிஞ்சப்பட்டுவிடும். ஒட்டியம்பாக்கம் கால்வாய், மதுரப்பாக்கம் கால்வாய் உள்ளிட்டவற்றை இணைத்து அந்த பகுதியை சுற்றி வெள்ளநீர் தேங்காமல் இருக்க ரூ.164 கோடியில் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து, “புதிய வீட்டு மனைகளை உருவாக்கும்போது அந்த பகுதி மழை காலத்தில் வெள்ளநீர் தேங்கும் பகுதியாக இருந்தால், மழைநீரை அருகில் உள்ள கால்வாய் அல்லது நீர் நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *