
சென்னை: பரந்தூர் விமான நிலையம் தொடர்பான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை மற்றும் நீராதாரங்கள் தொடர்பான உயர்மட்ட வல்லுநர் குழு அறிக்கை அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று ‘டிட்கோ’ நிறுவன மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்தார்.பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தலைமைச் செயலகத்தில் இதுகுறித்து அமைச்சர்கள், கிராமப் பிரதிநிதிகள் இடையில் பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்பாக, அப்பணிகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் (டிட்கோ) மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன் கிராம மக்களின் ஒரே கோரிக்கை ஏகனாபுரத்தை விட்டுவிட வேண்டும் என்பதுதான். அதேநேரம், விமான நிலையத்துக்கான இடம் தொடர்பான வடிவமைப்பை மாற்ற முடியுமா என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.இதுதவிர, வெள்ளம் வரும் என்பது குறித்த நீரியல் தொடர்பான பிரச்சினைகளை அனைவரும் தெரிவிக்கின்றனர். அவ்வாறு நடைபெறுவதற்கு வாய்ப்பில்லாத வகையில், இருக்கும் நீர்நிலைகளை முடிந்தவரை அப்படியே பராமரித்தல் அல்லது ஒருசில இடங்களில் மாற்றியமைத்தல் அல்லது ஒரு பகுதியை மூடுதல் ஆகியவை குறித்தும், அந்த நீர்நிலைக்கு மேல் மற்றும் கீழ் உள்ள இடங்களில் என்ன செய்யலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்ய உயர்மட்ட வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.மத்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் அந்த குழுவுக்கு தலைமையேற்றுள்ளார். அவர் அளிக்கும் அறிக்கை உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து பார்த்துதான் இறுதி முடிவுக்கு வர முடியும்.இவற்றை பேச்சுவார்த்தையின்போது அமைச்சர்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். அதை கேட்ட கிராம பிரதிநிதிகள் சரி என்று கூறியுள்ளனர். குறிப்பிட்ட பகுதியை எடுக்காமல் விட முடியுமா? என்பது தற்போதைய சூழலில் எங்களுக்குத் தெரியாது.ஆய்வு அறிக்கைகள் கிடைத்த பின்னர்தான், முடிவு செய்ய முடியும் என்று கூறியதற்கு, நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி வரவேண்டும். எனவே, பேச்சுவார்த்தையில் வெற்றியில்லை என்று கூற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.