
புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில், உருமாறிய கொரோனா வைரசை கண்டறிய ரூ.3.5 கோடி மதிப்பில் அதிநவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் வகையை கண்டறிய புதுச்சேரியில் ஆய்வகங்கள் இல்லை. இதனால், கொரோனா பாதித்தவர்களின் மாதிரிகள் ஹைதராபாத் அல்லது புனேவில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதால் முடிவுகள் பெறுவதில் தாமதமாகிறது.அதனைத் தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி உத்தரவின் பேரில், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில், ரூ.3.5 கோடி மதிப்பில் உருமாறிய கொரோனா வைரசை கண்டறியும் அதிநவீன கருவிகளுடன் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவக்கல்லுாரி நுண்ணுயிரி துறையில் அமைந்துள்ள ஆய்வகத்தில் உருமாறிய கொரோனா நுண்கிருமியைத் துல்லியமாக அறிந்து அதன் இயல்புகளை புரிந்து கொள்ள முடியும்.உருமாறிய கொரோனா வைரஸ் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள முடியும். இதற்காக டாக்டர்கள்,தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவிடம் கேட்டபோது, மரபணு உருமாறும் கொரோனா நுண்கிருமியைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு பிராந்தியலும், எந்த மாதிரியான உருமாறிய வைரஸ் உள்ளது, அதன் தன்மை என்ன, திடீரென ஒரே இடத்தில் கொத்துக் கொத்தாக பலருக்கு பரவும் தொற்று எந்த வகையை சேர்ந்தது என உடனுக்குடன் கண்டறிந்து அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சிகிச்சை முறைகளை மாற்றியமைக்க முடியும். இந்த ஆய்வகத்தை விரைவில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார் என்றார்.