
லண்டன்: ஊழல் மற்றும் பண மோசடியுடன் தன்னை தொடர்புப்படுத்தி பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் மீது இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக லலித் மோடி எச்சரிக்கை. பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நிதிமுறைகேடு நடந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, 2010ம் ஆண்டு, இந்தியாவை விட்டு வெளியேறிய லலித் மோடி பிரிட்டன் தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார்.’மோடி’ எனும் சாதியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்நிலையில், லலித் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:- நான் நீதிக்கு பயந்து வெளிநாட்டிற்கு தப்பி சென்றதாக ராகுல் மற்றும் அவரை சார்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர். அது ஏன்? இந்நாள் வரை நான் எந்த வழக்கிலும் தண்டனை பெற்றது கிடையாது. ராகுல் இப்போது சாதாரண குடிமகன். ராகுல் மீது பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். அப்போது அவர் உறுதியான ஆதாரங்களுடன் வருவார் என நம்புகிறேன். அவர், தன்னை முழு முட்டாளாக உணர்ந்து கொள்வதை காண ஆர்வமாக இருக்கிறேன். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலருக்கு வெளிநாட்டில் சொத்து உள்ளது. அவர்களின் முகவரி மற்றும் படங்களை அனுப்ப தயார். மக்களை முட்டாள் ஆக்க வேண்டாம்.நாட்டை ஆள்வது தங்களது அதிகாரம் என ராகுல் குடும்பத்தினர் எண்ணுகின்றனர். சட்டங்களை கடுமையாக்கிய பிறகு நாட்டிற்கு திரும்ப தயாராக உள்ளேன். கடந்த 15 ஆண்டுகளில், ஒரு பைசா எடுத்ததாக என் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. மாறாக 100 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் விளையாட்டு தொடரை உருவாக்கி உள்ளேன். கடந்த 1950 களில், காங்கிரசாரை விட, ‘மோடி’ சமுதாயத்தினர், நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நாட்டிற்கு அதிகம் செய்துள்ளனர் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் லலித் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.