
அசாம் மாநிலத்தில் உள்ள கரிம்கஞ்ச் (Karimganj) பகுதியைச் சேர்ந்த அன்குரித் கர்மாகர் (Ankurit Karmakar) என்ற 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் பார்வைத் திறன் குறைபாடுடையவர்களுக்காக ஸ்மார்ட் ஷூ ஒன்றை தயாரித்திருக்கிறார். இந்த ஸ்மார்ட் ஷூவில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் பார்வையற்றவர்கள் செல்லும் வழியில் வரும் தடைகளையும் எதிரே வரும் பொருள்கள், வாகனங்கள் போன்றவைகளைக் கண்டறிந்து எச்சரிக்கை ஒலியெழுப்பும். இதன் மூலம் செல்லும் வழியில் வரும் தடைகளை எளிதில் கண்டறியலாம். இதுபற்றிக் கூறிய அன்குரித் கர்மாகர், பார்வைத் திறன் குறைபாடுடையவர்களுக்காக இந்த ஸ்மார்ட் ஷூ வை உருவாக்கியதாகவும் மிகப்பெரிய விஞ்ஞானி ஆவதே அவரது லட்சியம் என்றும் கூறினார். மேலும் ‘மக்களுக்கு உதவும், அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் இதுபோன்ற பணிகளை நான் மேலும் செய்வேன்’ என்று கூறியிருந்தார்.இதையடுத்து அசாம் மாநில சட்டமன்ற உறுப்பினர் கிரிஷ்நெண்டு, ஸ்மார்ட் ஷூவை உருவாக்கிய அன்குரித் கர்மாகரை நேரில் சந்தித்து விஞ்ஞானியாகும் அவரின் கனவுக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கைக்கும் அசாம் அரசு துணைநின்று தேவையான உதவிகள் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.இது பற்றி செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிரிஷ்நெண்டு, ”அன்குரித் கர்மாகர் என்ற மாணவன் பார்வைத் திறன் குறைபாடுடையவர்களுக்காக ஸ்மார்ட் ஷூவை உருவாக்கினார் என்ற செய்தி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதையறிந்த எங்கள் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா (Himanta Biswa Sarma) அன்குரித் கர்மாகரை நேரில் சந்திக்க ஆணையிட்டார். அவர் விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார் என்பதால் அசாம் அரசு, அன்குரித் கர்மாகரின் எதிர்கால வாழ்க்கைக்கும், அவரின் கனவுகளுக்கும் துணைநின்று உதவி செய்யும் என்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்” என்றார்.