பாப்ஸ்கோ ஊழியர்கள் கடலில் இறங்கியதால் பரபரப்பு; நிலுவை சம்பளம் வழங்க கோரிக்கை.!

புதுச்சேரி: பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு 65 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து ஊழியர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. தலைமையில் 13 விதமான போராட்டங்கள் நடத்தி வந்தார்கள். இப்போராட்டத்தின் விளைவாக அமைச்சர் அலுவலகத்தில் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை ஏற்று ஊழியர்களின் தொடர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் அமைச்சர் உறுதி அளித்தவாறு இரண்டு மாதங்களுக்குள் பாப்ஸ்கோ நிறுவனத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, நிலுவை ஊதியம் வழங்குவது, நிலுவையில் உள்ள கடனை அடைப்பது போன்றவைகள் நடைபெறவில்லை. பின்னர் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக துறையின் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமாரை சங்கத்தினர் சந்தித்தனர். இனிமேல் இந்தத் துறைக்கு நான் அமைச்சர் இல்லை இனிமேல் என்னை வந்து பார்க்காதீர்கள் எதுவாக இருந்தாலும் முதலமைச்சரிடம் கேளுங்கள் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து உடனடியாக முதலமைச்சரை சந்தித்து அமைச்சர் சொன்னதை தெரிவித்தோம் முதலமைச்சர் முழுமையாக கேட்காமல் குழு அமைத்திருக்கிறேன் என தெரிவித்து சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து அமைச்சரும், முதலமைச்சரும் பொறுப்பற்ற முறையில் முரண்பாடான கருத்துக்களை கூறி பாப்ஸ்கோ ஊழியர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் தலைமையில் 8-வது நாளான இன்று தலைமைச் செயலகம் எதிரில் கடலில் இறங்கி போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமையிலும் பாப்ஸ்கோ ஊழியர் சங்க தலைவர் ரமேஷ் செயலாளர் ஜெய்சங்கர் பொருளாளர் பிரபு, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் திணேஷ் பொன்னையா, மாநில கவுரவத் தலைவர் அபிஷேகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *