
சென்னை: தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிம்சனில் கண்டன உண்ணாவிரத போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில், பா.ஜ.க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் என 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் பேசிய பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் ராணுவ வீரர்கள் குண்டுவைப்பதில், துப்பாக்கியால் சுடுவதில், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள்; ஆனால் இதையெல்லாம் நாங்கள் செய்வதாக இல்லை, எங்களை செய்ய வைத்துவிடாதீர்கள் என தமிழ்நாடு அரசை எச்சரிக்கிறேன்” என சர்ச்சையை தூண்டும் வகையில் பேசினார். கர்னல் பாண்டியனின் பொறுப்பற்ற பேச்சு இந்திய இறையாண்மை, பொது அமைதிக்கு எதிரானது என பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். கர்னல் பாண்டியனின் பேச்சுக்கு கடும் கண்டனமும், எதிர்ப்பும் எழுந்த நிலையில், அவர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது காவல்துறை. காவல்துறையின் உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவல்களை வைத்து திருவல்லிக்கேணி காவல்துறையினர் கர்னல் பாண்டியன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது மற்றும் வன்முறையைத் தூண்டுவது என்பதன் அடிப்படையில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி குற்றத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பிரிவுகள் சேர்க்கப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.