
புதுடில்லி : கடந்த ஒன்பது மாதங்களில், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிறைகளில் உள்ள இந்தியர்களில் ஆறு பேர் இறந்துள்ளது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.இது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தானில் நிலைமை மோசமாக உள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில், பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர்களில் ஆறு பேர் இறந்துள்ளனர். இவர்களில், ஐந்து பேர் மீனவர்கள். இவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே தண்டனை காலம் முடிந்துவிட்ட நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.இது தொடர்பாக, அந்நாட்டு அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அங்கு, சிறையில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்கு, அந்நாட்டு அரசே பொறுப்பாகும். மேலும், அவர்களின் பாதுகாப்பை பாக்கிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.