பழிக்குப்பழியாக நடைபெற்ற கொடூரக்கொலை சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பு.!

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே உள்ள மீனவ கிராமமான நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த அபினேஷ், கடந்த 9-ம் தேதி முகம், தலையில் பலத்த காயங்களுடன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அபினேஷ் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த கோட்டக்குப்பம் காவல்துறையினர், கொலைக்குக் காரணம் முன் விரோதமா? கொலை செய்தது யார்? வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றனவா? உள்ளிட்ட சந்தேக கோணங்களில் தீவிரமாக விசாரித்து வந்தனர். கொலையாளி யாரென கண்டறிவதற்காக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.இந்தச் சம்பவத்தில், தற்போது அதிர்ச்சிகரமான புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோட்டகுப்பம், சோலை நகர்ப் பகுதிகளைச் சேர்ந்த 5 பேர்தான் இந்தக் கொலையை செய்துள்ளனர் எனும் திடுக்கிடும் தகவல் விசாரணையில் தெரியவந்தது. அதன் பின்னர், புதுச்சேரி அருகே உள்ள சோலை நகர்ப் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(20), கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த அஜித்ராஜ்(22), அகமத் அசேன்(22) ஆகிய 3 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் காவல்துறையினர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, திடுக்கிடும் பல தகவல்கள் தெரிய வந்துள்ளன.புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை அருகே உள்ள சோலை நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் அபினேஷ் வசித்து வந்தபோது, மேல்தளத்தில் வின்னரசன் என்பவர் அவர் மனைவி, 7 வயது மகனுடன் குடியிருந்து வந்திருக்கிறார். ஓரினச்சேர்க்கையாளரான அபினேஷ், அந்த 7 வயது சிறுவனிடமும் தகாத முறையில் நடக்க முயன்றாராம். இதனால் அச்சம் கொண்ட அந்த சிறுவன், அபினேஷ் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றி தன் தந்தையிடம் விவரித்துள்ளான். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தந்தை வின்னரசன், தன் சித்தப்பா கலையரசனுடன் கடந்த 4-ம் தேதி மதியம் அபினேஷை நேரில் சந்தித்து, `ஏன் இப்படி தகாத முறையில் நடந்து கொண்டாய். இனிமேல் அப்படி நடந்து கொள்ளாதே’ எனக் கூறி கடுமையாக எச்சரித்துள்ளனர்.அதைக் கேட்டு ஆத்திரமடைந்த அபினேஷ், `என்னை மிரட்டிப் பார்க்கிறீர்களா? நான் யார் என்று உங்களுக்குத் தெரியாது. என்கிட்ட வச்சுக்கிட்டா இரண்டு பேரையும் கொன்னுடுவேன்’ என மிரட்டியிருந்தாராம். இந்த நிலையில், மறுதினமே (5-ம் தேதி) கலையரசன் சோலை நகர் கடற்கரை பகுதியில் உயிரிழந்து கிடந்துள்ளார்.இதை அபினேஷ்தான் செய்திருக்கக் கூடும் என்ற பேச்சு ஊர் முழுக்க பேசப்பட்டுள்ளது. இதனால் கலையரசனின் உறவினர் சதீஷ், அபினேஷை பழிக்குப்பழி வாங்க வேண்டும் என எண்ணியுள்ளார். ஆகவே நண்பர்களான அப்பு, அஜித்ராஜ், அகமது அசேன், அரவிந்த் ஆகியோருடன் சேர்ந்து அபினேஷைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். இந்த பரபரப்பு தகவல் முழுவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார், மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அப்பு, அரவிந்த் ஆகிய 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.பழிக்குப்பழியாக நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த கொடூரக்கொலை சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *