
கும்பகோணம் அருகே உள்ள தேனாம்படுகை கிராமம் மண்டகமேடு புதுத்தெருவில் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த 49 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சாதிச் சான்றிதழ் இல்லாததால் அவர்களுடைய பிள்ளைகள் 10-ம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர முடியாமல் தவித்தனர். படிப்பதற்கான ஆர்வம் இருந்தும், சாதிச் சான்றிதழால் அவை தடைபட வேறு வழி யில்லாமல் தங்களுடைய பெர்றோர்கள் செய்யும் வேலையை அந்த மாணவர்கள் செய்கின்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.இந்த மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு பல வருடங்களாகப் போராடி வந்தனர். அவர்களுடைய கோரிக்கை நிறைவேறவே இல்லை. “நாங்கதான் கஷ்டப்பட்டுட்டோம், எங்க பிள்ளைகளாவது படிச்சு நல்ல நிலைக்கு வந்து கரை சேர்ந்துடு வாங்கனு நெனச்சோம். அதுக்கு நாங்க பொறந்த சாதியே தடையா இருக்கு”னு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் பல வருடங்களாக கண்ணீர் வடித்து வந்தனர். பழங்குடி மக்கள் சாதிச் சான்றிதழ் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கும் தகவல் அண்மையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்துக்கு சென்றுள்ளது.சாதிச் சான்றிதழால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவது என்பது பெரும் கொடுமை என கலங்கியவர், உடனடியாக பள்ளிக் கல்வித்துறைக்கு உரிய கள ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்டார். அதிகாரிகள் ஆய்வில் சாதிச் சான்றிதழ் பெற முடியாததால் அந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்க முடியவில்லை என தெரியவந்தது. அதையடுத்து, அந்த மாணவர்களுக்கு உடனடியாக சாதிச் சான்றிதழ் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக தேனாம்படுகை மண்டகமேடு புதுத்தெரு கிராமத்துக்கு சென்றதுடன், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியைப் பார்வையிட்டார்.

பின்னர் பள்ளியில் படித்து வரும் 16 மாணவ, மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கினார். ஒவ்வொரு மாணவர்களின் வீடுகளுக்கே சென்று ஆட்சியர் சான்றிதழை நேரடியாக வழங்கினார். “சாதிச் சான்றிதழ் கேட்டு நாங்க 25 வருடங்களாக நடையாய் நடந்து அழைந்து திரிந்து போராடினோம்.ஆனால் சான்றிதழ் கிடைக்கும் எங்க பிள்ளைகள் படிச்சு நல்ல நிலைக்கு வருவதற்கான காலம் வரும் என்ற எங்க கனவெல்லாம் நெசமாகுறதுக்கு வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு ஒவ்வொரு முறை சான்றிதழ் கேட்டு போறப்பவும் நிகழ்ந்த சம்பவங்கள் எங்களுக்கு உணர்த்தின. ஆனால் இன்றைக்கு எங்களுக்கு வீடு தேடி வந்து சாதிச் சான்றிதழை கலெக்டர் அய்யா கொடுத்ததுடன் `நல்லா படிச்சு வாழ்கையில உயர்ந்த நிலைக்கு வரணும்’ எனவும் எங்க பிள்ளைகளை வாழ்த்தினார். எங்க பிள்ளைகள் படிச்சு கரை சேர்ந்துடும் என்ற நம்பிக்கை முதல் முறையாக எங்களுக்கு ஏற்பட்டிருக்கு” என நெகிழ்ந்து கலெக்டருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது, “பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் இல்லை, பிற மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருந்தது.25 வருடங்களாக சாதிச் சான்றிதழ் கேட்டுப் போராடிய அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, அரியலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிருந்து அவர்களது ரத்த உறவுகள் பெற்ற சாதிச் சான்றிதழ்களை அடிப்படையாக கொண்டு தற்போது அவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இனி வருங்காலத்தில் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியை தடையின்றி தொடரமுடியும். இதே போல் இந்த பகுதியில் மீதமுள்ள மாணவர்களுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. அத்துடன் அடிப்படை வசதிகள் சிலவற்றை செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அவையும் விரைவில் நிறைவேற்றி தரப்படும்” என்றார்.