
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால், கடந்த 2 மாதங்களில் இருளர், மலைவாழ் மக்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் உட்பட பழங்குடியினர்களுக்கு அதிகளவு ஜாதிச்சான்றிதழும், பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 34வது புதிய மாவட்டமாக, கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கள்ளக்குறிச்சி உதயமானது. மாவட்டத்தில், ஆதியன் இனத்தைச் சேர்ந்த பூம்பூம் மாட்டுக்காரர்கள், இருளர், நரிக்குறவர்கள், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பழங்குடியினர் பரவலாக வசிக்கின்றனர். வீட்டு மனைப் பட்டா, ஜாதிசான்று வழங்குவது மாவட்டத்தின் முக்கிய பிரச்னையாக உள்ளது. வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பட்டா மற்றும் ஜாதிச்சான்றிதழ் கேட்டு மனு அளிக்கின்றனர். பழங்குடி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவதில், மாநில அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் 38வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட மூன்றாவது கலெக்டராக பொறுப்பேற்ற ஷ்ரவன்குமார், முக்கிய பிரச்னையாக உள்ள ஜாதிச்சான்றிதழ், வீட்டுமனை பட்டாவுக்கு அதிகளவு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன்படி, கடந்த 2 மாதங்களில் இருளர், மலைவாழ் மக்கள், ஆதியன் இனத்தைச் சார்ந்த பூம், பூம் மாட்டுக்காரர்கள் உள்ளிட்ட பழங்குடியினர்கள் 2,400 பேருக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவி வழங்குவதில் பின்னடைவில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், மாநில அளவில் 12வது இடத்தைப் பெற்று முன்னேறியுள்ளது. அதேபோல், நரிகுறவர்கள் மற்றும் பழங்குடியினர்கள் 1,840 பேருக்கு ஒருங்கிணைந்த பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு கடந்த 2 மாதங்களில் 4,500 இ-பட்டாக்கள் வழங்கி, மாநில அளவில் 13வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இ-அடங்கல் பதிவேற்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநிலத்தில் 3வது இடத்தில் உள்ளது. குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் பணியில் தமிழகத்திலேயே கள்ளக்குறிச்சி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்டத்தில் விளிம்பு நிலையில் வசிக்கும் வீடுகளற்ற பொதுமக்கள், சம்மந்தப்பட்ட வருவாய்துறை அலுவலர்களிடம் மனு அளித்து வீட்டுமனைப் பட்டா பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.