
வேலூர்: பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்போனை கொண்டு வந்தால் மாணவர் மீதும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 800 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் சிலர் கடந்த 23 ஆம் தேதி வகுப்பறையில் உள்ள இரும்பு மேஜை, நாற்காலி ஆகியவற்றில் தரையில் போட்டு அடித்து நொறுக்கினர்.மேலும் அவற்றின் மீது ஏறி நின்றும் உடைத்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. பள்ளியில் பிரிவு உபசார விழாவுக்கு அனுமதி அளிக்காததால் பிளஸ் 2 மாணவர்கள் 10 பேர் இவ்வாறு பொருட்களை உடைத்ததாக தெரிகிறது.இது தொடர்பாக புகாரின் பேரில் அந்த 10 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அடுத்த மாதம் மே 4 ஆம் தேதி வரை பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களால் உடைக்கப்பட்ட பொருட்களுக்கு அவர்களுடைய பெற்றோர் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.இந்த நிலையில் பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் கொண்டு வரக் கூடாது என வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி வகுப்பறைக்குள் செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் மீதும் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தாவரவியல் ஆசிரியராக பணிபுரியும் சஞ்சய் என்பவரை அடிக்க கை ஓங்கி அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்த மாணவன் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.அண்மைக்காலமாக பள்ளிகளில் மாணவர்கள் இது போன்று ஆசிரியர்களிடம் தவறாக நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியரை மாணவர் ஒருவர் கொலை செய்யும் சம்பவத்தையும் நாம் அறிவோம். இது போன்ற மூர்க்க குணம் உள்ள மாணவர்களுக்கு கவுன்சலிங் தேவை என்றும் அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு நன்னடத்தை வகுப்புகளை எடுத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.