
திருக்கனூர்: புதுவை மாநிலம் திருக்கனூரை அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தில் 1905-ல் பிரெஞ்சு ஆட்சியில் படுகை அணை கட்டப்பட்டது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் விவசாயம், குடிநீர் தேவை பூர்த்தியானது. போதிய பராமரிப்பின்றி 2016-ல் படுகை அணை நடுப்பகுதியில் சிறிய உடைப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் சீரமைப்பு செய்யாமல், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர். கடந்த ஆண்டு கனமழையின்போது பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணையின் நடுப்பகுதியில் 140 மீட்டர் தூரம் உடைந்தது. இதனால்தண்ணீர் முழுமையாக வெளியேறி கடலில் கலந்து வீணானது. படுகை அணை உடைந்து நவம்பர் 20-ந் தேதியுடன் ஓராண்டாகிறது. இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் செல்லிப்பட்டு படுகை அணைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி என போஸ்டர் தயாரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில் படுகை அணை படத்துடன், அடையாளம் கொடுத்தவன் நீ, தாகம் தீர்த்தாய் தண்ணீராக, என்றும் இருப்பாய் கண்ணீராக என குறிப்பிட்டுள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.