
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வந்த மூத்த பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தார். வழக்கு நடைபெற்று வரும் நிலையில், மாணவி எழுதிய கடிதத்தில் உள்ள கையெழுத்து அவருடையது இல்லை என்பதை தடயவியல் நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தார். மேலும் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முகநூல் மற்றும் டிவிட்டர் பதிவிலும் அவர் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரை சைபர் கிரைம் போலீசார் இன்று திடீரென கைது செய்துள்ளனர். மாணவி மர்ணம் தொடர்பாக, அவர் சமூக வலைத்தலங்களில் கருத்துகள் பதிவிட்டு வருவதால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.சாவித்ரி கண்ணன் கைதுக்கு பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையில் இருந்து எந்த நபரும் தப்பிக்க முடியாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.