
கரூர் மாவட்டம், அப்பிபாளையம் பகுதியில் வசித்து வரும் பட்டியிலனத்தைச் சேர்ந்தவர் கமலநாதன் மனைவி அய்யம்மாள். இவர், சரவணன் என்பவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.10,000 கடனாக வாங்கியிருக்கிறார். அதற்கு, 15 தினங்களுக்கு ஒரு முறை வட்டி மட்டும் ரூ.1,000 செலுத்தும் வகையில் அவர் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் வட்டியாக மட்டும் ரூ. 48,000 வரை செலுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அய்யம்மாள் அசல் தொகை ரூ.6,000 தொகையை வழங்கியிருக்கிறார். இருப்பினும், வட்டித் தொகையை கேட்டு பொதுமக்கள் முன்னிலையில் சரவணன் அடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் கந்துவட்டி அடாவடி கும்பலைப் பிடித்து தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பலைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட நபர்கள் அன்றிரவே அந்தப் பகுதியில் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பட்டியிலன மக்கள் 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில், கமலநாதன் மகனான ஆட்டோ டிரைவர் வினோத்குமார் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தலித் விடுதலை இயக்கம் மற்றும் தோழமை அமைப்புகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அப்போது, தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கருப்பையா, மாநில துணைத்தலைவர் தலித் ராஜகோபால், சமநீதி கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் புகழேந்தி கண்மணி ராமச்சந்திரன் உள்ளிட்டப் பலர் கையொப்பமிட்டு, பாதிக்கப்பட்டவர்களோடு இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, தலித் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ச.கருப்பையா, “அப்பிபாளையம் சம்பவம் தொடர்பாக தான்தோன்றிமலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தான்தோன்றிமலை காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்ய வேண்டும். இதுபோன்று, கந்துவட்டி கும்பல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமெனில், காவல்துறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கரூர் மாவட்டத்தில் அதிகரித்துவரும் கந்து வட்டி கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். நடவடிக்கை மேற்கொள்ளாத பட்சத்தில், வரும் பிப்ரவரி 2-ம் தேதி புதன்கிழமை ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைத்து, கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.