
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்றது. அதையடுத்து முதல்வராக அந்தக் கட்சியின் பகவன்ந்த் மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில், “மாநிலத்தின் நலன் கருதி முக்கிய முடிவு எடுக்கப்படும்” என்று பதிவிட்டிருந்தார்.இன்று காலை அவர் அந்த மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார்.சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் கிராமத்தில் நடைபெற்ற அவரின் பதவியேற்பு விழாவில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய பஞ்சாப் முதல்வர், “மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடுவோம். இன்று முதல் பணிகள் தொடங்கும். ஒரு நாளைக் கூட வீணாக்க மாட்டோம். ஏற்கெனவே 70 ஆண்டுகள் தாமதமாகிவிட்டோம்” என்றார்.இந்த நிலையில், மார்ச் 23-ம் தேதி `ஷாஹீத் திவாஸ்’ அன்று பஞ்சாப்பின் புதிய முதல்வர் பகவந்த் மான், ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைன் தொடங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் அதை வீடியோ அல்லது ஆடியோவாக எனது தனிப்பட்ட வாட்ஸ் அப் மூலம் மாநிலமக்கள் ஊழல் புகார்களைத் தெரிவிக்கலாம்.

ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாப்பில் இனி ஊழல் நடக்காது. பஞ்சாப் வரலாற்றில் இன்றுவரை இதுபோன்ற முடிவை யாரும் எடுத்திருக்க மாட்டார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.