பசிபிக் பெருங்கடலில் விழுந்து; சீனா விண்ணில் அனுப்பிய ராக்கெட் பாகங்கள்.!

பீஜிங்: சீனாவின் கட்டுமான பணியில் உள்ள டியான்காங் விண்வெளி நிலையத்திற்கு தேவையான மெங்சியான் என்ற உபகரணங்களின் தொகுதியை கொண்டு செல்வதற்காக 108 அடி நீளமும், 23 ஆயிரம் கிலோ எடையும் கொண்ட ராக்கெட்டானது கடந்த அக்டோபர் 31-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அது புவி வட்டபாதைக்குள் நுழைந்தது. அந்த உபகரணங்களை அனுப்பி விட்டு, பின்னர், ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் மீண்டும் பூமியை நோக்கி திரும்பியது. எனினும், இந்த ராக்கெட் பூமியின் எந்த பகுதியில் சரியாக விழும் என்ற விவரங்களை சீனா உறுதி செய்யவில்லை. பொதுவாக, இதுபோன்ற ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது, வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகும். எனினும், கடந்த காலத்தில் சீன ராக்கெட் குப்பைகளில் சில முழுவதும் எரியாமல், அதன் பாகங்கள் பூமியில் விழுந்த அதிர்ச்சிகர சம்பவங்கள் நடந்து உள்ளன. இந்த முறை மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடக்க கூடிய சாத்தியம் உள்ளது என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர். இதுபற்றி விண்வெளி கழகத்தின் தலைமை பொறியியலாளர் அலுவலகத்தின் ஆலோசகர் டெட் மியூல்ஹாப்ட் கூறும்போது, சீனா மீண்டும் இதுபோன்று செயல்படுகிறது. இதனால், 88 சதவீத உலக மக்களின் வாழ்க்கை பேராபத்தில் உள்ளது என கூறினார். இதற்கு முன்பு இதேபோன்று சீன ராக்கெட்டின் மீதமுள்ள பாகங்கள் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டன. ராக்கெட் எந்த பகுதியில் பூமியில் விழும் என்பது பற்றிய சரியான தகவல்களை சீனா தெரிவிக்கவில்லை என அப்போது, மேற்கத்திய மற்றும் ஆசிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன. இந்த நிலையில், ராக்கெட்டானது, வளிமண்டலத்தில் நுழைந்து தெற்கு-மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் இன்று அதிகாலை 4.01 மணியளவில் விழுந்துள்ளது என யு.எஸ்.ஸ்பேஸ்காம் என்ற அமெரிக்க விண்வெளி கழகம் உறுதிப்படுத்தி உள்ளது. ராக்கெட்டின் வடிவமைப்பின்படி, பூமியின் எந்த பகுதியில் விழவேண்டும் என்ற வழிகாட்டி அமைப்போ அல்லது மக்களிடம் இருந்து தொலைவில் விழுவதற்கான அமைப்போ அதில் இடம் பெறவில்லை. சீன ராக்கெட் பூமியில் இதுபோன்று விழுவது நான்காவது முறையாகும். கடந்த 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் என மூன்று முறை சீனாவின் ராக்கெட்டுகள் இதுபோன்று பூமியில் விழுந்துள்ளன.ஒவ்வொரு முறையும், ராக்கெட் பாகங்களால் தரையில் உள்ள மக்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என சீனா தொடர்ந்து கூறி வந்தது. எனினும், நேற்றைய தினம் ஸ்பெயின் நாட்டின் விமான நிலையம் ஒன்று மூடப்பட்டதுடன், நூற்றுக்கணக்கான விமானங்கள் நேற்று காலை காலதாமதமுடன் இயக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *