
கோவை: கோவை காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி கவிதா. கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.கவிதா 2016ஆம் ஆண்டில், பேருந்தில் சக பயணியிடம் இருந்து 10 பவுன் தங்க நகையைத் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று அவர் நீதிமன்றம் சென்றிருந்தார்.தன்னையும் இரு குழந்தைகளையும் பிரிந்து வாழும் கவிதாவிடம் நீதிமன்ற வளாகத்தில் வாக்குவாதம் செய்தார் கணவர் சிவா.நீதிமன்ற வாயில் வரை அவரைத் தொடர்ந்து சென்று அங்கேயும் வாக்குவாதத்தைத் தொடர்ந்தார். தங்களுடன் வந்து வசிக்கும்படி வலியுறுத்தினார். கவிதா இதற்கு ஒப்புக்கொள்ளாததால் ஆடவர் சினமடைந்ததாகத் தெரிகிறது. பின்னர் பிளாஸ்டிக் போத்தலில் மறைத்து வைத்திருந்த அமிலத்தை கவிதாவின்மேல் அவர் ஊற்றினார்.உடல் முழுவதும் அமிலம் பரவியதால் கவிதா அணிந்திருந்த சேலை முழுவதுமாக எரிந்ததாகக் கூறப்படுகிறது.அருகில் நின்றிருந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் தனது கறுப்பு அங்கியைக் கழற்றி கவிதாமீது போர்த்த முயன்றதாகவும் அந்த அங்கியும் எரிந்ததுடன் வழக்கறிஞரின் கையில் காயம் ஏற்பட்டதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.அருகில் நின்ற மேலும் சில வழக்கறிஞர்கள் ஆடவரின் செயலைத் தடுக்க முயன்றனர். அவர்கள்மீதும் அமிலம் பட்டதில் அவர்களுக்குச் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.சம்பவத்தை அடுத்து ஆடவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.ஆனால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்ததுடன் அடித்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் அங்கு வந்த காவல்துறையினரிடம் ஆடவரை ஒப்படைத்தனர்.சம்பவத்தில் படுகாயமடைந்த கவிதா உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கோவை மாநகரக் காவல்துறைத் துணை ஆணையர் சந்தீஷ் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆடவர் தண்ணீர் போத்தலில் அமிலத்தை எடுத்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாகக் கூறினார். தன்னோடு வந்து வசிக்க மனைவி ஒப்புக்கொள்ளாததால் அமிலம் வீசியதாக அவர் விசாரணையில் கூறியுள்ளார். விசாரணை தொடர்கிறது.அமிலம் வீசிய சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் கணவன்-மனைவி என்பதும் பகல் நேரத்தில், நீதிமன்ற வளாகத்தில் இத்தகைய சம்பவம் நடந்ததும் அந்த வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.