
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமாக உயிரிழந்ததை தொடர்ந்து, கடந்த ஜூலை17-ந் தேதி மாணவர் அமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் கலவரக்காரர்கள் பள்ளி பேருந்து மற்றும் பள்ளிகள் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தி தீ வைத்தனர். பள்ளியில் இருந்த நாற்காலிகள் மற்றும் மேஜைகளை அடித்து நொறுக்கி பயங்கர சேதத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளின் ஆதாரத்தை கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கனியாமூர் சக்திமேல்நிலை பள்ளியில் வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் கனியாமூர் சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி சார்பில் சென்னை உயர்நீதிமன்றம் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. பள்ளியில் 9ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில், மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தால் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி 145 நாட்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடக்கப்பட்டுள்ளன.