நீட் தேர்வு சமத்துவத்துக்கு எதிரானது..” : உச்ச நீதிமன்றத்தில் புதிய சூட் மனு – தமிழ்நாடு அரசு அதிரடி.!

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – ‘நீட்’ தமிழ்நாட்டில் 2017 ஆம் ஆண்டில் இருந்து 17க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் ‘நீட்’ தோல்வி பயம் காரணமாக தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.

‘நீட்’ தேர்வு நடத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் பரிந்துரைக்கு இரண்டு முறை அனுப்பப்பட்டும் பயன் இல்லை. இந்நிலையில், நீட் தேர்வை ரத்துசெய்து உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றதில் புதிய சூட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், நீட் தேர்வு சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டு மாணர்களை நீட் தேர்வு கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக கிராமப்புற மாணவர்களையும், மாநில பாடதிட்டத்தில் பயிலும் மாணவர்களையும் பாதிக்கிறது.

பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களால் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கவும் இயலாது. இது போன்ற பல காரணங்களால் தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வு பெரிய அளவில் பாதித்து வருகிறது என்று மனுவில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் நன்கொடை வசூலிப்பது போன்ற முறைகேடு நடப்பதாகக் கூறித்தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. ஆனால், அரசுக் கல்லூரிகளில் அதுபோன்ற கட்டணமோ, முறைகேடோ இருந்தது இல்லை. எனவே, அரசுக் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு அறிவித்தது சரியான நடைமுறை அல்ல.

நீட் தேர்வு அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தும் மாநில அதிகாரத்தைப் பறித்துவிட்டது. நீட் தேர்வு கூட்டாட்சி நடைமுறைக்கு எதிரானதாக உள்ளது. கல்வி மீதான மாநில அரசின் சுயாட்சிக்கு எதிராக உள்ளது என்று மனுவில் தமிழ் நாடு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, நீட் தேர்வு அறிமுகமான பிறகு கிராமப்புற மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சமத்துவத்துக்கு எதிரானதாக உள்ளது. நீட் தேர்வு அரசியல் சாசனப் பிரிவு 14, 21யை மீறியுள்ளது. எனவே, ஒன்றிய அரசின் நீட் தேர்வு சட்டங்களை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அறிவித்து ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்.

நீட் தேர்வை அனுமதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஆண்டு புதிய ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது புதிய சூட்மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இம்மாத இறுதிக்குள் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *