நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை எலிகள் மூலம் மீட்கும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்..!

தினசரி வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை பயிற்சி அளிக்கப்பட்ட எலிகள் மூலம் மீட்கும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்..இந்தப் புதுமையான முயற்சியில்ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் டோன்னா கீன் இறங்கியுள்ளார். இந்த சோதனையின் போது சிறிய அளவிலான எலிகள் கட்டட இடிபாடுகளுக்குள் ஒரு சிறிய அளவிலான முதுகுப் பையுடன் (பேக்) அனுப்பப்படுகிறது. இந்த சிறிய முதுகுப் பையில் ஒலிவாங்கி (மைக்) ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஒலிவாங்கியின் உதவியால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் நம்மால் பேச இயலும்.இதுவரை 7 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த எலிகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதுகுப் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சோதனை முயற்சியாக இந்த எலிகள் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட இடிபாடுகளுக்குள் அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டது. ஒலி வாங்கி மட்டுமில்லாது சில உணரிகள் (சென்சார்ஸ்) கூட பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் உண்மையில் நிலநடுக்கம் ஏற்படும் போது இந்த உணரிகள் பெரிதும் உதவியாக இருக்கும்.இது குறித்து டாக்டர்டோன்னா கீன் கூறியதாவது, “ எலிகள் சுத்தமற்றவை என்பது நமது தவறான புரிதல். எலிகள் மனிதர்களுடன் எளிதில் பழகும் திறன் கொண்டவை. எலிகளால் இடிபாடுகளுக்குள் சுலபமாக செல்ல முடியும். நாங்கள் சோதனை முயற்சியை செய்து முடித்துள்ளோம். இருப்பினும், இந்த பயிற்சி பெற்ற எலிகள் உண்மையான நிலநடுக்க இடிபாடுகளுக்குள் அனுப்பி இன்னும் சோதிக்கப்படவில்லை. இடிபாடுகளுக்குள் செல்லும் எலியின் முதுகுப் பையில் உள்ள ஒலி வாங்கியின் உதவியால் எங்களால் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களிடம் பேச முடியும்” என்றார்.170 எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவை நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும் நாடான துருக்கிக்கு அனுப்பப்பட உள்ளதாக டாக்டர் டோன்னா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *