நித்யானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்த சீடர்; விழுப்புரம் அருகே பெரும் பரபரப்பு.!


சேதராப்பட்டு: புதுவை குருமாம்பேட் பாண்லே பால் பண்ணை அருகே உள்ள தமிழக பகுதியான பெரம்பை ஐஸ்வர்யா நகரில் நித்யானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு கோவிலைக் கட்டி வந்தார்.27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு இதற்கு பத்துமலை முருகன் கோவில் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதற்கிடையில் கோவில் உள்ளே நுழையும் பொழுது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு பத்துமலை முருகன் மற்றும் நித்யானந்தா உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை இருந்தது.இதுகுறித்து கோவில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்ட போது இது சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர்.ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்கவில்லை என்று கூறினர். பின்னர் கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்த பொழுது அவர் அறை முழுவதும் நித்யானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும் நித்யானந்தா புகைப்படத்தை ஓவியமாக தீட்டி வைத்திருப்பதும் என நிறைய புகைப்படங்கள் இருந்தது. ஏற்கனவே நித்யானந்தா படங்களை வைத்து அவர் பூஜித்து வந்ததும் தெரியவந்தது. பாதுகாப்பு பணிக்கு வந்த ஆரோவில் போலீசார் நித்யானந்தா சிலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.ஒரு சில பக்தர்கள் அந்த சிலையின் முன்னாடி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.கும்பாபிஷேக அழைப்பிதழில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம் பெற்றிருந்தது.இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர் கே.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து பங்கேற்பார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கூறினர்.நித்யானந்தா சீடர் முருகன் கோவில் என கட்டி அங்கு 18 அடியில் நித்யானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *