“நாயை காணவில்லை பட்டியலின இளைஞரை கட்டி வைத்து அடித்த கொடூரம்? ஆதிக்க சாதி வெறி கும்பலுக்கு துணை போன காவல்துறை..!

கரூர் மாவட்டத்தில் ஆதிக்க சாதியினரின் நாயைத் திருடியதாகச் சொல்லி பட்டியல் சமூக இளைஞரை மரத்தில் கட்டிவைத்து சித்ரவதை செய்த கொடுமை அரங்கேறியிருக்கிறது. இந்த அநீதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய போலீஸாரோ, தங்கள் பங்குக்கு அந்தக் குடும்பத்தின் இளைஞரை காவல் நிலையத்தில் இரண்டு நாள்கள் வைத்து தாக்கியிருக்கிறார்கள்!

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் காளியப்பன் – முத்தம்மாள் தம்பதியர். இவர்களின் மகன்கள் கார்த்திக், எட்டிதுரை, சங்கர். மேற்கண்ட கொடுமையை அனுபவித்தது இந்தக் குடும்பத்தினர்தான்… கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர்களைச் சந்தித்துப் பேசினோம்…

நம்மிடம் பேசிய எட்டிதுரை, “எங்க ஊரைச் சேர்ந்த குமரேசனுக்கு கடவூர் மலை அடிவாரத்துல பண்ணை இருக்கு. அதுல, எங்க அண்ணன் கார்த்திக் மூணு வருஷமா வேலை பார்க்குறான். நான் கிடைக்குற கூலி வேலைக்குப் போவேன். குமரேசன் பண்ணையில் காவல் காக்க நாய் ஒண்ணை வளர்த்தாங்க. ஒரு மாசத்துக்கு முன்னாடி அந்த நாய் காணாமப் போயிடுச்சு. போன மாசம் 26-ம் தேதி, கடைக்குப் போன என்னை குமரேசனும், முருகேசன்கிறவரும் மறிச்சு, ‘நீதானே நாயைத் திருடினே?’ன்னு கேட்டாங்க… நான் மறுக்கவே, சாதிப் பேரைச் சொல்லி திட்டி, என்னை எட்டி உதைச்சாங்க. பிரம்பால கண்டபடி அடிச்சாங்க. என்னை ஒரு வண்டியில ஏத்திக்கிட்டு, ஊர் ஊரா அழைச்சுக்கிட்டுப் போயி, ‘நாயை எங்கே கட்டிவெச்சுருக்க’னு கேட்டு அடிச்சாங்க. சோறு, தண்ணி தராம ரெண்டு நாள் சித்ரவதை செஞ்ச பிறகு 28-ம் தேதி, எங்க ஊர் பள்ளிக்கூடத்துக்கு முன்னாடி இருக்குற வேப்பமரத்துல கட்டிப்போட்டு தாக்கினாங்க. இதைக் கேள்விப்பட்டு என்னோட அண்ணன் கார்த்திக், சங்கர், அம்மா முத்தம்மாள், மனைவி தமிழ்செல்வி எல்லாரும் வந்தாங்க. அவங்களையும் கடுமையாகத் தாக்கினாங்க. ஏழு மாச கர்ப்பமா இருக்குற என் மனைவியையும் கொஞ்சம்கூட ஈவு இரக்கமில்லாம எட்டி உதைச்சாங்க.

இந்த விஷயம் ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர்கிட்ட போகவே, அவர் போலீஸை வரவெச்சு எங்களை மீட்டார்.

பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷனுக்கு என்னை அழைச்சுக்கிட்டுப் போனவங்க, அன்னைக்கு ராத்திரி முழுக்க ஸ்டேஷனுக்கு வெளியே பனியில உட்காரவெச்சாங்க. மறுநாள் காலையில வந்த எஸ்.ஐ ராமசாமி, ‘நாயை எங்கே வித்த, சொல்லு?’னு கேட்டு, லத்தியால அடிச்சார்… ஸ்டேஷன்லயும் ரெண்டு நாள் என்னை வெச்சு அடிச்சாங்க. செய்யாத தப்புக்கு இந்தக் கொடுமையா சார்… நாயைவிட நாங்க கேவலமா போயிட்டோமா? இல்லை… பட்டியல் சமூகத்துல பொறந்தது பாவமா?” என்றவர் அதற்கு மேல் பேச முடியாமல் வெடித்து அழுதார். அவரின் தாய் முத்தம்மாள், “என் மகனை விட்டுருங்கனு ஒவ்வொருத்தன் கால்லயும் விழுந்து கெஞ்சினோம். ஆனா, எங்களையும் எட்டி உதைச்சாங்க. ஊருக்குப் போக பயந்துக்கிட்டு, 15 நாளா கரூர்லயே இருக்கோம்” என்றார் அழுகையுடன்.

இது குறித்துப் பேசிய ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்டச் செயலாளர் பசுவை.பெரு.பாரதி, “அவங்களை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினா அங்கேயும் போட்டு அடிச்சதுதான் கொடுமையிலும் கொடுமை. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ‘தப்பு செஞ்சுருந்தா எட்டிதுரை மேல கேஸ் போடுங்க. அதை விட்டுட்டு ரெண்டு நாளா வெச்சு அடிக்கிறதுக்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தா?’னு எங்க வழக்கறிஞர் கேட்ட பின்னாடிதான், எட்டிதுரையை ரிலீஸ் பண்ணினாங்க. ஆனா, அஞ்சு நாள் அடி வாங்குனதுல அவரால நடக்கவே முடியலை. அவரை கரூர் ஜி.ஹெச்சுல சேர்த்தோம். இந்தக் கொடுமைக்கு எதிராக குளித்தலை டி.எஸ்.பி., எஸ்.பி-னு பலருக்கும் புகார் கொடுத்தோம்… ஒரு நடவடிக்கை இல்லை. அதனால, திருச்சி ஐ.ஜி-க்குப் புகார் கொடுத்தோம். அதுக்கு அப்புறம்தான் குமரேசன், முருகேசன் மேல மட்டும் தீண்டாமை ஒழிப்புச் சட்டம், பெண்களைத் தாக்குதல் உட்பட நாலு பிரிவுகள்ல வழக்கு பதிவு பண்ணி, குமரேசனை மட்டும் கைது பண்ணியிருக்காங்க. ஆனால், இவங்களைத் தாக்கின இன்னும் 10 பேரைத் தப்பிக்க விட்டுட்டாங்க” என்றார் கொதிப்புடன்.

இது குறித்து விசாரிக்க, குமரேசன் வீட்டுக்குச் சென்றோம். குமரேசனின் தந்தை முனியாண்டி, “அந்த நாயோட விலை இருபதாயிரம் ரூபா… அதை நான்தான் எடுத்தேன்னு எட்டிதுரை ஒத்துக்கிட்டான். ஒவ்வொரு ஊரா அழைச்சுட்டுப் போய்க் கேட்டும், நாயை எங்கே கட்டிவெச்சுருக்கான்னு சொல்லலை… ஒருகட்டத்துல அவன் தப்பிச்சு ஓடியிருக்கான். அதனால்தான், கோபத்துல குமரேசன் அடிச்சுருக் கலாம். நாங்க அவனை கட்டிவெச்சு அடிக்கலை” என்றார்.

குளித்தலை சரக டி.எஸ்.பி ஸ்ரீதரிடம் பேசினோம்… “எட்டிதுரை நாயைத் திருடியிருக்கிறார். அந்தக் கோபத்தில் தாக்கிவிட்டனர். அதற்காக குமரேசன், முருகேசன் ஆகியோர்மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, குமரேசனைக் கைது செய்துவிட்டோம். எஸ்.ஐ ராமசாமி, எட்டிதுரையை ரெண்டு தட்டு தட்டியிருக்கிறார். அதனால், அவரை ஏ.ஆர் பிரிவுக்கு மாற்றியிருக்கிறோம்” என்றார் சாதாரணமாக!

ஏழை மக்களுக்கு என்றால் நீதியும் எட்டாத விஷயம்தானா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *