நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி.!

புதுடெல்லி: நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் மருத்துவ படிப்பிற்கு கூடுதலாக 8,195 இளங்கலை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை 94 சதவீதம் அதிகரித்து, தற்போது 99,763 ஆக அதிகரித்துள்ளது. இந்த 50 புதிய மருத்துவ கல்லூரிகளில் (30 அரசு மற்றும் 20 தனியார்) கல்லூரிகளாகும். அதன்படி, தெலுங்கானா, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஒடிசா, நாகாலாந்து, மகாராஷ்டிரா, அசாம், கர்நாடகா, குஜராத், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிதாக 50 மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில், தெலுங்கானாவுக்கு மட்டும் 12 புதிய மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்.எம்.சி) இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் ஆய்வுகளின் போது, பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை எனக் கூறி நாடு முழுவதும் உள்ள 38 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் கடந்த இரண்டரை மாதங்களில் திரும்பப் பெறப்பட்டது. கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், சிசிடிவி கேமராக்கள், ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பட்டியல்கள் தொடர்பான பல குறைபாடுகள், கமிஷனின் யுஜி போர்டு நடத்திய ஆய்வுகளின்போது கவனிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்து தற்போது 654 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *