நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது.!

புதுடெல்லி: 2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது.

அதற்காக, மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் எந்த சின்னத்தில் ஓட்டு பதிவானது என்பதை உறுதி செய்யும் ‘விவிபாட்’ எந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனையை ஆரம்பித்துள்ளது.

தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் இத்தகவல்களை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் ‘விவிபாட்’ எந்திரங்களின் முதல்கட்ட பரிசோதனை, நாடு தழுவிய நடவடிக்கையாக மேற்கொள்ளப்படுகிறது. இது படிப்படியாக நடத்தப்படும்.இதன் ஒரு அங்கமாக தேர்தல் ஒத்திகை நடத்தப்படுகிறது. கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மேற்கொள்ளப்படும்.சட்டசபை தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளிலும் மட்டுமின்றி நாடு முழுவதும் தேர்தல் ஒத்திகை நடத்தப்படும்.

அப்போது பின்பற்ற வேண்டிய நிலையான உத்தரவுகள் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன.மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் ‘விவிபாட்’ எந்திரங்களின் செயல்பாடுகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பரிசோதிக்கப்படும். இந்த எந்திரங்களை தயாரித்த ‘பெல்’, இந்திய மின்னணு கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் என்ஜினீயர்கள் பரிசோதித்து பார்ப்பார்கள்.குறைபாடுடைய எந்திரங்கள், மாற்றித்தருவதற்கோ அல்லது பழுது பார்ப்பதற்கோ அவற்றை தயாரித்த நிறுவனங்களுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *