நடிகர் சிவகுமார் உருக்கம் பெரியார் இட்ட விதைதான் இன்று சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பலர் உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம்..!!

கோவை மாவட்டம் சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற செந்தலை ந.கவுதமன், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்ற சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் பங்கேற்றி சிறப்புரையாற்றினார்.அப்போது பேசிய சிவக்குமார், “சூலூருக்கும், சுயமரியாதை கொள்கைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை பெரியார் ஒருபோதும் அவமரியாதை செய்தது இல்லை. குன்றக்குடி அடிகளார் இருக்கையில் அமர்ந்திருந்த போது அவருக்கு இணையாக உட்கார மறுத்தவர் பெரியார்.ஆதிக்க சக்திகளையும், பிராமணீயத்தையும்தான் அவர் எதிர்த்தார். பிராமணர்களை என்றும் வெறுக்கவில்லை. காஞ்சி பெரியவர் மயிலாப்பூர் கோவிலுக்கு வந்த போது தி.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதை அறிந்து, அவர்களுக்கு அறிவுரை கூறி காஞ்சிப் பெரியவருக்கு பாதுகாப்பு கொடுத்தார்.பிறர் உணர்வுகளை மதித்தவர். பெரியார் இட்ட விதைதான் இன்று சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் பலர் உயர் பதவிகளில் இருப்பதற்கு பெரிய காரணம்.” என பேசியிருந்தார்.தொடர்ந்து, அரசு விருது பெற்ற செந்தலை ந.கவுதமன், சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு இருசக்கர வாகனங்களை நடிகர் சிவகுமார் பரிசளித்தார். விழாவில், சூலூர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பொன்முடி, முருகநாதன், மன்னவன், ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *