
கள்ளக்குறிச்சி: தனியார் பள்ளி மாணவி இறப்பின் காரணமாக கலவரம் நடந்த கனியாமூர் பள்ளியில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து சீரமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது. இந்நிலையில், சென்னையில் உள்ள நக்கீரன் வாரப்பத்திரிகையின் தலைமை சிறப்பு செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ்(56), புகைப்பட சேகரிப்பாளர் அஜீத்குமார்(26) ஆகியோர் காரில் வந்தனர். பள்ளி அருகே காரை நிறுத்தி விட்டு சீரமைக்கும் பணியை படம் எடுத்துள்ளனர். இதை அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தடுத்ததுடன், செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, செய்தியாளர் காரில் ஏறி புறப்பட்டார். அப்போது, பணியில் இருந்த சிலர், டூவீலரில் காரை விரட்டினர்.தலைவாசல் அருகே சர்வீஸ் சாலையில் காரை மறித்து நிறுத்தி, செய்தியாளர் தாமோதரன் பிரகாசை கடத்திச்செல்ல முயன்றனர். அப்போது புகைப்பட சேகரிப்பாளர் அஜீத்குமார், தப்பி ஓடினார். உடனே டூவீலரில் வந்த நபர்கள், அவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். இதை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து செய்தியாளரை அடையாளம் கண்டு, அவரை தாக்கியவர்களிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள், சின்னசேலம் அருகே தங்களது டூவீலர் மீது காரை மோதி விட்டு, நிற்காமல் வந்துவிட்டனர் எனக்கூறி, மீண்டும் அவரையும் அவரது கார் மற்றும் உரிமைகளையும் சூறையாடி தாக்கினர்.

இதையடுத்து, பொதுமக்கள் அவர்களை, அருகில் இருந்த தலைவாசல் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.அங்கு பணியில் இருந்த ஏட்டு விசாரித்த போது, மீண்டும் அதையே கூறினர். இதையடுத்து, அவர்களை சின்னசேலம் போலீசில் புகார் அளிக்கும்படி கூறியதால், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். பின்னர், செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், ஏட்டுவிடம் கூறுகையில், ‘கனியாமூர் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக இருக்கும் மோகன், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரன், பள்ளி நிர்வாகியின் தம்பி அருள்சுபாஷ் ஆகியோர் தலைமையிலான கும்பல், என்னை தாக்கி, கொலை செய்யும் நோக்கில் எனது காரிலேயே கடத்திச்செல்ல முயன்றனர். அங்கு வந்த பொதுமக்கள், என்னை அவர்களிடம் இருந்து மீட்டனர். எனது செல்போன் மற்றும் மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றுவிட்டனர்,’ என்றார். இதனிடையே தலைவாசல் காவல் நிலையத்துக்கு வந்த ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன், விசாரணை மேற்கொண்டார். காயமடைந்த செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், புகைப்பட சேகரிப்பாளர் அஜீத்குமார் ஆகியோர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு, சின்னசேலத்தை சேர்ந்த செல்வராஜ்(36), தீபன்சக்கரவர்த்தி(36), செல்வகுமார்(38), பாலகிருஷ்ணன்(45), கனியாமூர் திருப்பதி நகரை சேர்ந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலரான ராஜசேகரன்(44) ஆகிய 5 பேரை, கொலை முயற்சி, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ், தலைவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 5 பேரையும் இன்று காலை ஆத்தூர் ஜேஎம் 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாஜிஸ்திரேட் உத்தரவுபடி ஆத்தூர் மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும், பள்ளி நிர்வாகியின் தம்பி அருள்சுபாஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ஒரு ஜனநாயக நாட்டில் செய்தியாளருக்கு கூட பாதுகாப்பு இல்லாதது மிகவும் வேதனையாக இருக்கிறது.