
சென்னை: தமிழகத்தில் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி வார்டுகளில் தங்கி இருந்த வெளி ஆட்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது. முக்கிய நகரங்களில் ஹோட்டல் அறைகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் அதன் பிறகு வார்டுகளுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் தங்கக் கூடாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.வார்டுகளில் வெளியூர் நபர்கள் யாராவது தங்கி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று இரவு தமிழகம் முழுவதும் விடிய விடிய லாட்ஜூகள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபம் ஆகியவற்றில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.சென்னையில் முக்கிய லாட்ஜ்களில் விடிய விடிய சோதனை நடைபெற்றது. திருவல்லிக்கேணி மேன்சன்கள், எழும்பூர், ரயில் நிலையம் அருகே இருந்த லாட்ஜ்கள், ஹோட்டல்கள், பெரியமேடு, கோயம்பேடு சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்த தங்கும்விடுதிகளில் அனைத்து பகுதிகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது போலீசார் லாட்ஜ் வரவேற்பு அறைகளில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.லாட்ஜூகளில் யார், யார் தங்கி உள்ளனர்? எதற்காக வெளியூர்களில் இருந்து அவர்கள் வந்துள்ளனர்? என்பது பற்றிய தகவல்களை போலீசார், லாட்ஜ் உரிமையாளர்களிடம் கேட்டனர். அதோடு அறைகளில் தங்கி இருப்பவர்களின் அறைகளுக்கு சென்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.சென்னை மாநகரம் முழுவதும் நேற்று இரவில் இருந்து தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், இன்று பகல் முழுவதும் சோதனை நடைபெற்றது. பணப்பட்டுவாடாவை தடுக்க இரவும் விடிய, விடிய வாகன சோதனை நடைபெறும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாகன சோதனையின் போது வெளி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனங்களை போலீசார் தவறாமல் சோதித்தனர். அப்போது அதில் இருந்தவர்களிடம் எதற்காக சென்னைக்கு வருகிறீர்கள் என்றும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது அடையாள அட்டைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. பணப்பட்டுவாடாவை தடுக்கவும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பிரசாரத்துக்காக வந்த பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தடையை மீறி யாராவது தங்கி இருப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளைய தினம் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.