
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள பெண் ஒருவரின் வீட்டில், ரகசிய தகவலின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 55 பழங்கால கற்சிலைகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவான பெண்ணை தேடி வருகின்றனர். கடந்த 2012ல், அரியலுார் மாவட்டம், வேலுார் செந்துரை வரதராஜ பெருமாள் கோவிலில் கதவை உடைத்து, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அனுமன் ஆகிய நான்கு உலோக சிலைகளை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பான வழக்கை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் ஒரு அருங்காட்சியகத்தில், அனுமன் சிலை இருந்தது கண்டறியப்பட்டு, அச்சிலையை காவல்துறையினர் மீட்டனர். இவை, சென்னையில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்த சிலைகளை பார்வையிட்ட பின், தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு செய்தியாளர் சந்திப்பில்:- தமிழகம் மட்டுமின்றி, வட மாநில கோவில்களில் இருந்து திருடப்பட்ட, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 55 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சிலைகள் அனைத்தும், எந்தெந்த கோவில்களுக்கு சொந்தமானவை என விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையில், சிலைகள் அனைத்தும், மறைந்த சர்வதேச குற்றவாளி தீனதயாளன் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. தீனதயாளன் யாரிடம் இந்த சிலைகளை வாங்கினார் என்பது குறித்து, அடுத்தடுத்த விசாரணையில் தெரிய வரும். தமிழகத்தில், 301 வழக்குகள் புலன் விசாரணையில் உள்ளன; 101 கண்டுபிடிக்காத வழக்குகள் உள்ளன. இந்த சிலைகளுக்கும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் தொடர்பு உள்ளதா என்ற விசாரணை நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளில், 306 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உதவியால், 64 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. விரைவில், சிங்கப்பூரில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த, 16 சிலைகள் மீட்கப்படும். கடந்த 1983 முதல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, 1,000த்துக்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டுள்ளனர். இவற்றில், சில நுாறு சிலைகள், சம்பந்தப்பட்ட கோவிலில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. தற்போது கைவசம், 1,541 பழமை வாய்ந்த சிலைகள் உள்ளன.
இவை அனைத்தும், தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில், 249 சிலைகள் முப்பரிமாண வடிவில், www.tnidols.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள சிலைகளையும் முப்பரிமாண வடிவத்தில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. மீட்கப்பட்ட அனுமன் சிலை, அரியலுார் மாவட்டத்தில் உள்ள வரதராஜன் பெருமாள் கோவிலில் ஒப்படைக்கப்படும். என்றும் அவர் கூறினார்.