தேர்தலை திருவிழாவாக்கிய இலவசங்களால் என்னவாகும்? இலவசங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவிருக்கிறது.!

கலர் டிவி முதல் கையில் காசு வரை விதவிதமான தேர்தல் இலவச அறிவிப்புகளை தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அறிவித்து, தேர்தலையே திருவிழாக் காலம் போல மாற்றியது இந்த இலவசங்கள்தான்.இதற்கு ஒரு கடிவாளமிட முடிவெடுத்துள்ளது உச்ச நீதிமன்றம்.‘தோ்தலின்போது வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகளால் இலவசங்கள் அறிவிக்கப்படுவது தீவிரமான பிரச்னையாகும்; இதனை கையாள்வதற்காக ஓா் அமைப்பை ஏற்படுத்துவது தொடா்பாக மத்திய அரசு, நீதி ஆயோக், நிதி ஆணையம், ரிசா்வ் வங்கி போன்ற அனைத்து தரப்பினரும் ஆக்கபூா்வமான பரிந்துரைகளை வழங்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை அறிவுறுத்தியது.‘தோ்தல் இலவசங்கள் வழங்கப்படுவதை எதிா்க்கவோ, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவோ எந்த அரசியல் கட்சியும் விரும்பாது’ என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும் அண்மையில் ஆற்றிய உரையில், வாக்காளர்களுக்கு இலவச அறிவிப்புகள் மோசமான கலாசாரத்தை உருவாக்கும் என்றும், அது வளர்ந்து வரும் நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என்றும் எச்சரித்திருந்தார்.பத்தாண்டுகளுக்கும் மேலாக, நாட்டில் நடக்கும் தேர்தலின்போது இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிடுவது தொடர்கதையாக உள்ளது. பணம், காசு, சாப்பாடு என தேர்தல் பிரசாரங்களுக்கு வரும் தொண்டர்களுக்கு வழங்குவதே கேலிக்குள்ளான நிலையில், வெளிப்படையாக வாக்காளர்களுக்கே இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது முதலில் வாக்காளர்களுக்கு ஆனந்தத்தை அளித்தாலும், சமூக ஆர்வலர்களுக்கு அது அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.இலவசங்கள் என்பது பொங்கலுக்கு ரொக்கப் பணம் என்பது முதல்.. கலர் டிவி, மிக்ஸி, கிரைண்டர் என நமது நினைவில் மறக்க முடியாத சில இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் ஏராளம். இதில் இலவச மிதிவண்டி, இலவச லேப்டாப் போன்றவை நிச்சயம் அடங்கும்.1960ஆம் ஆண்டில் ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்குவதாக அறிவித்தார் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. அது ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பாக அமைந்தது. ஆனால், அதை தங்களுக்கு சாதகமான முறையாக மாற்றி இலவசங்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டது அதிமுக.

இலவச மின்சாரம், இலவச செல்லிடப்பேசி, இலவச ஃவைபை, கடன் தள்ளுபடி, மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், இலவச எரிவாயு உருளை என தேர்தல் தோறும் வாக்காளர்களைக் கவரும் இலவசங்களை அறிவித்தது.2006ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவும் இதுபோன்ற பலஅறிவிப்புகளைசெய்தது. அதில் ஒன்றுதான், ஏழை எளிய மக்களுக்கு கலர் டிவி.தமிழகத்தில் இப்படியென்றால், உத்தரப்பிரதேசத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று 2013ஆம் ஆண்டு அகிலேஷ் யாதவ் அறிவித்தார். அதன்படி சுமார் 15 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட்டதாக புள்ளிவிவரம் கூறுகிறது.2015ஆம் ஆண்டு தில்லி பேரவைத் தேர்தலில் மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாகவும் ஒவ்வொரு வீட்டுக்கும் தினமும் 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வங்கப்படும் என்ற மிகப்பெரிய அறிவிப்பினை செய்து ஆம் ஆத்மி அதுபோன்ற மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.மிகப்பெரிய கட்சிகளே பார்த்து பார்த்து இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை செய்து கொண்டிருந்தபோது, தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலின்போது மதுரை தெற்கு தொகுதியில்போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் நிலாவுக்கு 100 நாள் சுற்றுலா, ஐபோன், வீட்டு வேலை செய்ய இலவசமாக ரோபோ என வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக அளித்திருந்தார். ஆனால் அவரது நல்ல காலம், அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை.கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட இலவச அறிவிப்பில், மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது 4 ஆயிரம் ரூபாய் கரோனா நிவாரணம், மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம், கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி. திமுக ஆட்சிக்கு வந்ததும் 4 ஆயிரம் நிவாரணத் தொகையும், மகளிருக்கு இலவசப் பேருந்து பயண திட்டமும் உடனடியாக செயல்படுத்தப்பட்டன. நகைக் கடன் தள்ளுபடியும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுவிட்டது. இவ்வாறு தமிழகம் சந்தித்த கடைசி தேர்தல் வரை இலவசங்கள் தொடர்கின்றன.இதற்கிடையே, குஜராத்தில் கால்பதிக்க நினைக்கும் ஆம் ஆத்மி, இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியை முன் வைத்துள்ளது.

இலவசத்தால் என்ன நடக்கிறது?பொது விநியோகத் திட்டம், வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதார திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாகப் பயன்படும். ஆனால், இது தவிர, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, கடன் தள்ளுபடி போன்றவைதான் இலவசங்கள் என்ற வரிசையில் வரும். இதனால், மாநிலத்துக்கு திரும்பி வரும் ஒரு குறிப்பிட்டத்தொகை இல்லாமல் போகிறது. எனவே, அதற்கான செலவினத்தை மற்றொரு லாபத்திலிருந்து எடுத்து செலவிடும் நிலை ஏற்படும். இது ஒரு தொடர் வட்டம் போல மாநிலத்தின் நிதிச்சுமையை அதிகரிக்கும்.

ரிசர்வ் வங்கி சொல்வது என்ன?

இதுபோன்ற இலவச அறிவிப்பினால், பல மாநிலங்களின் நிதிச்சுமை கடுமையாக அதிகரிப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.2022-23ஆம் ஆண்டில் இலவசங்களை அறிவித்திருக்கும் மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாப், ஆந்திரம், ஜார்க்கண்ட் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இவற்றில் பஞ்சாப் மற்றும் ஆந்திரத்தில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் இலவசங்களுக்கான செலவினம் 2 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. இதனால் அந்த மாநிலங்களின் நிதிச்சுமை கடுமையாக மோசமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்ல, இந்த மூன்று மாநிலங்களும் தங்களது மொத்த வருவாயில் 10 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொகையை இந்த இலவசங்களுக்காகவே மேற்கொள்கின்றன என்கிறது ஆர்பிஐ.பஞ்சாப் மாநிலத்தின் கடன் சுமை ரூ.2.63 லட்சம் கோடி, வருவாய் பற்றாக்குறை ரூ.12,554 கோடி என்ற நிலையில்தான், பல்வேறு இலவச வாக்குறுதிகளை அறிவித்த ஆம் ஆத்மி பொறுப்பேற்றுள்ளது. ஜூலை முதல் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்டுக்கு ரூ.1800 கோடி நிதிச்சுமையை ஏற்படுத்தும். மிக மோசமான நிதிச்சுமையுடன் மிகப்பெரிய சவாலை ஏற்றுக் கொண்டுள்ளது ஆம் ஆத்மி என்கிறது நிதிநிலவரம்.பொது நலன் மனுஇந்த நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கிறது பொது நலன் மனு. தோ்தல் இலவசங்களுக்கு எதிராக வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்த பொது நல மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.இந்த மனு மீது தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது.

அப்போது, நீதிபதிகள் கூறியது

தோ்தல் இலவசங்கள் விவகாரத்தில் தங்களால் எதுவும் செய்ய இயலாது என்று தோ்தல் ஆணையமோ மத்திய அரசோ கூற முடியாது. இது தீவிரமான பிரச்னை. இதில், மத்திய அரசு, நீதி ஆயோக், நிதி ஆணையம், ரிசா்வ் வங்கி, எதிா்க்கட்சிகள் எனஅனைத்து தரப்பினரும் சிந்தித்து, ஆக்கப்பூா்வ பரிந்துரைகளை வழங்க வேண்டும். அப்போதுதான், இப்பிரச்னையை கையாள்வதற்கு ஓா் அமைப்பை ஏற்படுத்த முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.‘அரசியல் கட்சிகளின் விருப்பம்’: விசாரணையின்போது, ‘தோ்தல் இலவசங்கள் பிரச்னையை கையாள்வதற்கு உகந்த அம்சங்கள் நிதி ஆணையத்திடம் இருக்கிறது’ என்று இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் தெரிவித்தாா்.அப்போது, தலைமை நீதிபதி கூறுகையில், ‘இப்பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என்று நினைக்கிறீா்களா? தோ்தல் இலவசங்களுக்கு எந்த கட்சியும் எதிா்ப்பு தெரிவிக்காது. இலவசங்கள் தொடர வேண்டுமென்றுதான் கட்சிகள் விரும்புகின்றன’ என்றாா். இதையடுத்து, அடுத்தகட்ட விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில், இன்று இந்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

One thought on “தேர்தலை திருவிழாவாக்கிய இலவசங்களால் என்னவாகும்? இலவசங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவிருக்கிறது.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *