தேசிய கபடி வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை… வேலை கிடைக்காத விரக்தி காரணமா?

சென்னை மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவர் காய்கறி வியாபாரம் செய்து தனது குடும்பத்தைக் கவனித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரின் இளைய மகள் இளங்கலை முடித்துவிட்டு, முதுகலை முதலாண்டு படித்து வருகிறார். மேலும் இவர் தேசிய அளவிலான கபடி வீராங்கனையாவார். இந்த நிலையில், நேற்று மாலை இவர் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டுப் தற்கொலை செய்து கொண்டார்.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இவரின் பெற்றோர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். பின்னர் போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து தற்கொலை செய்துகொண்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக போரூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தொடர்ந்து, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.இந்த விசாரணையில், ராஜஸ்தானில் கபடி போட்டியை முடித்துவிட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்த இவர், தனது அக்காவிடம் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதப் போவதாகக் கூறியுள்ளதாக போலீஸார் கூறினர். மேலும் இந்த முதற்கட்ட விசாரணையில் வேலை கிடைக்காத விரக்தியில் தான் இவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்துள்ளது எனவும் போலீஸார் கூறியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் தற்கொலைக்கான காரணங்கள் வேறு ஏதேனும் இருக்கிறதா எனவும் விசாரித்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *