
நெல்லை: கங்கைகொண்டான் பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியின் வளாகத்தில் உள்ள தேசியக் கொடியேற்றும் கம்பத்தில் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சாதிக் கொடியை ஏற்றியிருக்கின்றனர். அதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பள்ளியின் தலைமையாசிரியரான அலெக்ஸ் சகாயராஜ் என்பவர் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அத்துடன், கிராமத்துப் பெரியவர்களும், சாதிய அமைப்பைச் சேர்ந்த சிலரும் இந்த விவகாரம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர். காவல்துறையினர் இதுவரை யாரையும் கைதுசெய்யாததால் அதிருப்தியடைந்த சாதிய அமைப்பைச் சேர்ந்த சிலர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளி வளாகத்தில் சாதிக் கொடி ஏற்றிய மர்ம நபர்களைக் கண்டுபிடித்து கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக ஆட்சியரிடம் புகாரளித்தவர்கள், கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் சாதிய வன்மத்துடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்கள். மேலும், ஆசிரியர்களின் பாரபட்சமான நடவடிக்கையின் காரணமாகவே பள்ளி வளாகத்தில் சாதிக் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்துச் சென்றனர்.