தென் அமெரிக்கா நாடான பெரு நாட்டில் அதிபருக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை- 7 பேர் பலி.!

லிமா: தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. 2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 அதிபர்களைக் கண்டது. இந்த நிலையில் பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கிய இடதுசாரி தலைவர் பெட்ரோ காஸ்டிலோ, வலதுசாரி தலைவர் கெய்கோவை வீழ்த்தி பெரு நாட்டின் அதிபராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் அவற்றை காஸ்டிலோ திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பெட்ரோ காஸ்டிலோ, பெரு நாட்டில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அரசை ஏற்படுத்தப்போவதாகவும் அறிவித்தார். இது அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிபரின் முடிவை எம்.பி.க்கள் நிராகரித்தனர். மேலும் பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அவரது பதவியைப் பறிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஓட்டு போட்டதால் காஸ்டிலோ அதிபர் பதவியை இழந்தார். மேலும் கிளர்ச்சி மற்றும் சதித்திட்டம் தீட்டியதற்காக அடுத்த சில நிமிடங்களில் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக துணை அதிபராக இருந்த 60 வயதான பெண் தலைவர் டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் தன்னை காவலில் இருந்து விடுவிக்குமாறு காஸ்டிலோ தாக்கல் செய்த மனுவை பெரு நாட்டின் நீதிமன்றம் நிராகரித்தது. இதனை தொடர்ந்து பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யவும், டினா பொலுவார்டே பதவி விலகவும் வலியுறுத்தி காஸ்டிலோ ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *