தூத்துக்குடி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவ படுகொலை செய்த பெண்ணின் தந்தை தலை மறைவு.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வீரப்பட்டி கிராமம் சேவியர் நகரை சேர்ந்தவர் முத்துக்குட்டி (50). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ரேஷ்மா (19), கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜ் (28). வெளிநாட்டில் வேலை பார்த்த மாணிக்கராஜ் ஊருக்கு திரும்பி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் முத்துக்குட்டி, மாணிக்கராஜுக்கு மாமா முறை என்று கூறப்படுகிறது.மாணிக்கராஜுக்கும், ரேஷ்மாவுக்கும் காதல் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு முத்துக்குட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளுக்கு முத்துக்குட்டி வேறொரு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறி மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா இருவரும் மதுரை திருமங்கலத்திற்கு சென்று காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணம் செய்த பிறகு ஊருக்கு வரமால் இருந்த தம்பதியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் மாணிக்கராஜ் – ரேஷ்மா வீட்டில் தனியாக இருந்த போது, முத்துக்குட்டி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.இது குறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தம்பதியின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.முதற்கட்ட தகவலில், மாணிக்கராஜ் சரியாக வேலைக்கு செல்லமால் மது அருந்தி வந்தாக கூறப்படுகிறது, மாணிக்கராஜ், ரேஷ்மாவிற்கு இடையே வயது வித்தியாசம், மேலும் மாணிக்கராஜ் படிக்கவில்லை என்பதால் ரேஷ்மா தந்தை முத்துக்குட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து, கடந்த மாதம் 26ந்தேதி முத்துக்குட்டி வெகு சிறப்பாக சடங்கு நடத்தியுள்ளார். கடந்த 28ந்தேதி ரேஷ்மா வீட்டை விட்டு வெளியேறி மாணிக்கராஜுடன் திருமணம் செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். முத்துக்குட்டியை கைது செய்த பின்னர் தான் முழு விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

One thought on “தூத்துக்குடி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியை ஆணவ படுகொலை செய்த பெண்ணின் தந்தை தலை மறைவு.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *