
தூத்துக்குடி: நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் இன்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 3 யூனிட்டுகளில் மொத்தம் 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் தினசரி நிலக்கரி தேவை 9 ஆயிரம் டன் ஆகும்.நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக அங்கு மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் இன்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.3 யூனிட்டுகளில் மொத்தம் 630 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அனல் மின் நிலையத்தில் சுமார் 30 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும், 3 அலகுகளை தவிர்த்து 2 அலகுகளில் சுமார் 420 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதைபோல் அடுத்தபடியாக நிலக்கரி வரும்வரை தற்போது இருக்கும் நிலக்கரியினை கொண்டு தான் தொடர்ந்து இயக்க முடியும் என்ற காரணத்திற்காகத்தான் சில யூனிட்கள் நிறுத்தப்பட்டு சில யூனிட்கள் மட்டும் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பல மாநிலங்களில் மின் தடை நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நிலக்கரி தட்டுப்பாடு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. இப்போது நிலைமை மோசமடைந்ததன் விளைவாக மின்வெட்டு ஏற்பட துவங்கியுள்ளது. கோடை காலம் தொடங்கி, மின்சாரத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் நாடு முழுவதும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது மின்வெட்டு.இந்தியாவை பொறுத்தவரை 173 அனல் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 96 ஆலைகளில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த 96 ஆலைகளில் 76 ஆலைகள் உள்நாட்டில் கிடைக்கும் நிலக்கரியை கொண்டு இயங்குபவை. 11 ஆலைகள் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மூலமாக இயங்குகின்றன.ஏப்ரல் 13 ஆம் தேதி நிலவரப்படி, 173 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 23.17 மில்லியன் டன்கள் என்ற அளவில் இருந்தன. இந்த ஆலைகளுக்கான ஒரு நாள் நிலக்கரி தேவை 2.76 மில்லியன் டன்கள் என்பதால் மொத்த கையிருப்பு ஒன்பது முதல் பத்து நாட்கள் வரையே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.ஜூன் மாத இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் கோடை காலம் உச்சம் தொட வாய்ப்புள்ளதால், அடுத்த நான்கு மாதங்களுக்கு மின்சாரத் தேவை மேலும் அதிகரிக்கும். அதை சமாளிப்பதற்கு ஏற்ற நிலக்கரி கையிருப்பு என்பது மிகக் குறைவாகவே உள்ளது.நிலைமையை சமாளிக்க திருத்தப்பட்ட நிலக்கரி இருப்பு விதிமுறைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு, தட்டுப்பாடுகளை கண்காணிக்க மின், நிலக்கரி, ரயில்வே ஆகிய அமைச்சக அதிகாரிகள் அடங்கிய துணைக் குழு ஒன்றை நியமித்துள்ளது.

36 மெட்ரிக் டன் நிலக்கரியை இறக்குமதி செய்யயவும் அனுமதி அளித்துள்ளது. எனினும், அவை எப்போது கிடைக்கும் என்பது போன்ற நடைமுறை சிக்கல்களால் மின்வெட்டு என்பது தவிர்க்க முடியாததாக ஆகியுள்ளது. இதனால், அடுத்தடுத்த மாதங்களில் இந்தியா மின் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் வல்லுநர்கள்.