
விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள ஆவுடையார்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமரன். இவரது மகள் கயல்விழி (17). அரசு பள்ளியில் +2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாணவி படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்ததால். இதனை அவரது தாய் கண்டித்ததால், மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் விக்கிரவாண்டி காவல்துறை, நேற்று அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, மாணவியின் உடல் இறுதி அஞ்சலிக்காக சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள் சவப்பெட்டியை கட்டியணைத்து அழுது கொண்டிருந்தனர். அப்போது சவப்பெட்டியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு, அழுது கொண்டிருந்த உறவினர்கள் மீது மின்சாரம் தாக்கியது. இதில் 9 பேர் தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தனர் மேலும் அருகில் இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்டு அங்கு கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 15 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவரும் 15 பேரிடமும் விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் விநாயக முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். துக்க வீட்டில் நடந்த இச்சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.