
விழுப்புரம் மாவட்டம்: திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட திருவெண்ணய் நல்லூர் அருகே தி.எடையூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு அருண் என்ற கல்லூரி மாணவர் அதே ஊரை சேர்ந்த சக இளைஞர்கள் 4 பேரால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொந்தளித்த கிராம மக்கள் கஞ்சா புழக்கமே இத்தகைய கொலை நிகழ்வுக்கு காரணம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் மாவட்ட அமைச்சர் என்கிற முறையிலும் சொந்த தொகுதிக்குள் வரும் கிராமம் என்பதாலும் அமைச்சர் பொன்முடி தி.எடையூருக்கு நேரில் சென்று கொலை செய்யப்பட்ட இளைஞர் அருண் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த முயன்றார். அப்போது ஆவேசமாக அமைச்சர் பொன்முடியை சூழ்ந்துகொண்ட கிராமமக்கள், தேர்தலின் போது ஓட்டுக்கேட்க வந்ததோடு சரி அதற்கு பிறகு தங்கள் ஊர் பக்கமே ஏன் வரவில்லை என சரமாரியாக வினவினர்.மேலும், இளைஞர் அருண் கொலைக்கு கஞ்சா ஆசாமிகள் தான் காரணம் என முறையிட்டனர். சொந்த தொகுதியை சேர்ந்த மக்கள் என்பதால் தனது கோபத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு மிகவும் பொறுமையாக நிகழ்வை கையாண்டார் அமைச்சர் பொன்முடி. சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு அருண் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு புறப்பட்டார் பொன்முடி.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் உயிரிழந்த அருண் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மேலும் அருண் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதேபோல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.