
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது தடுத்தாட்கொண்டூர் ஏரி. இந்த ஏரிக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள், நேற்று 18/02/23 தங்களது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் துர் நாற்றத்துடன் முட்புதரில் மனித எலும்புக்கூடு கிடந்ததை பார்த்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பாரதிராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். ஏரியில் தண்ணீர் கிடந்த நிலையில், தற்போது வற்றி வருவதால் அதில் எலும்பு கூடு கிடந்தது தெரியவந்தது. ஆனால் எலும்பு கூடாக கிடந்தவர் ஏரியில் மூழ்கி இறந்தாரா, அல்லது யாரேனும் கொலை செய்து வந்து போட்டு சென்றதில், உடல் அழுகி எலும்பு கூடானதா என்று பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்தபகுதியில் மாயமானவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து விசாரணையை நடத்தி வருகின்றனர் . மேலும் இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார். ஏரியில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.