திருவள்ளூர்: பெற்ற குழந்தையைக் கழிவறையில் வீசி சென்ற கொடூரம் – தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பேடு பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனை கழிவறையின் மேலே பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனைப் பார்த்த நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறினார். இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக காவல்துறைக்குத் தெரிவித்தது.மருத்துவமனையில் பிரசவம் எதுவும் நடக்காத சூழலில் வெளியிலிருந்து வந்த யாரோதான் குழந்தையைக் கழிவறையில் போட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம், மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் மருத்துவமனைக்கு விரைந்த சோழவரம் பகுதி காவல்துறையினர், அங்குப் பதிவாகியிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் இரவு 10 மணிக்கு மேல், கர்ப்பிணிப் பெண் ஒருவர், இன்னொரு பெண்ணுடன் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.

வயிற்று வலி என்று சிகிச்சைக்காக வந்த பெண் சிறிது நேரத்திலேயே மருத்துவமனையிலிருந்து சர்வ சாதாரணமாக நடந்து சென்றது தெரியவந்தது. சந்தேகமடைந்த போலீஸார் அந்தப் பெண் குறித்த தகவலைச் சேகரித்தனர். விசாரணையில் அந்தப் பெண் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சாய்ரா பானு (33) என்பது தெரியவந்தது.போலீஸார், சாய்ரா பானுவைக் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, தன் கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், அதன்பின்னர் லாரி ஓட்டுநர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறியிருக்கிறார். அதன் காரணமாகத் தான் கர்ப்பமடைந்ததாகவும் அந்தப் பெண் கூறியிருக்கிறார். பின்னர், பிரசவ வலி ஏற்படவே மருத்துவமனைக்கு வந்ததாகவும், மருத்துவமனைக்கு வந்து கழிவறையில் தனக்கு தானே பிரசவம் பார்த்து, குழந்தையைக் கழிவறையின் மேல் வீசிச் சென்றதாகவும் அதிர்ச்சி தகவலைக் கூறியிருக்கிறார்.

அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சாய்ரா பானுவை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அந்த பச்சிளம் பெண் குழந்தை பசியால் அழுது துடிதுடித்து இறந்துள்ளது. பெற்ற தாயே தன் குழந்தையைக் கழிவறையில் வீசிச் சென்ற விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *