திருக்கோவிலூர் அருகே கிண்டல் செய்த பள்ளி மாணவன் சக மாணவனால் வெட்டி கொலை; 3 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்த காவல் துறை.!

திருக்கோவிலூர்: 17 வயது பள்ளி மாணவன் நண்பனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவிலூர் அருகில் உள்ள டி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் பெங்களூருவில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கோகுல் (17). இவர் திருக்கோவிலூர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்றிரவு கோகுலுடன் படிக்கும் ஒரு மாணவர் இருசக்கர வாகனத்தில் வந்து, கோகுலை அழைத்துக்கொண்டு சென்றார். அதன்பின்னர் வெகு நேரமாகியும் கோகுல் வீட்டிற்கு வராததால் அவரது தாயார் ஜெயபாரதி, கோகுலை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் கோகுல் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஜெயபாரதி, உறவினர்களுடன் சேர்ந்து இரவு முழுவதும் தேடினார்.

இந்நிலையில், இன்று (மே 15) காலை 6 மணியளவில் திருக்கோவிலூர் புறவழிச் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கோகுல் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கோகுலின் ஒரு கை மணிக்கட்டு துண்டான நிலையிலிருந்தது. அதோடு, தலை, கை, கழுத்து மற்றும் வயிறு பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் இருந்தன. கோகுலின் உடலின் மீது ஒரு வீச்சரிவாளும், பேனா கத்தியும் கிடந்தது.
இதையடுத்து கோகுல் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில் கோகுலை அவரது வகுப்பைச் சேர்ந்த சக மாணவனே கொலை செய்தது தெரியவந்தது. இந்த இரு மாணவர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

தொழில்நுட்ப உதவியுடன் மூன்று மணி நேரத்தில், கொலையாளியான கோகுல் படிக்கும் பள்ளியில், ஒரே வகுப்பில் படித்து வந்த அருண் பிரகாஷை கைது செய்து விசாரித்தனர்.
அருண் பிரகாஷிடம் விசாரணை நடத்தி போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

அருண் பிரகாஷ் கூறும்போது, என் உடம்பு பருமனாக இருப்பதால் நண்பன் கோகுல் என்னைத் தொடர்ந்து அசிங்கமாகக் கிண்டல் கேலி செய்து வந்தான். சில தினங்களுக்கு முன்பு எனது மார்பு பகுதியை பிடித்து அசிங்கப் படுத்தினான் அப்போது என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தேன். நேற்று (மே 14) மாலை 7.30 மணிக்கு கோகுல் வீட்டுக்கு பைக்கில் சென்று வாடா வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று அழைத்து சென்றேன்.

அப்போது சாலை ஓரத்தில் இறங்கி கொஞ்சம் தூரம் நடந்து சென்றபோது கோகுலைப் பேனாக் கத்தியால் குத்தினேன். பதட்டத்துடன், கோகுல் என்னடா கத்தியால் குத்திட்ட என்று என்னை அடிக்க வந்தான். உடனே வண்டியில் வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்டினேன். அவன் தடுக்க முற்பட்டபோதுதான் கை துண்டாகியது. பின்னர் அவன் கீழே சாய்ந்ததும் வெட்டி சாய்த்துவிட்டு பக்கத்து ஊருக்குத் தப்பி ஓடிவிட்டேன் என்று கதறி அழுதான் என காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் அரசு தனியார் பள்ளி மாணவர்களிடையே கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டு வருகிறது இதனை தடுப்பதற்கு அரசு சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் சார்ந்த வகுப்புகள் நடத்தி பள்ளி கல்லூரி மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை சரிசெய்ய வேண்டும் என்று அரசிற்கு பகுஜன் குரல் செய்திகள் சார்பில் கோரிக்கை வைக்கிறேம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *