திரவுபதி முர்முவின் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடும் பழங்குடியின மக்கள் மேளதாளங்களுடன் கொண்டாடி வருகின்றனர்.!

புதுடெல்லி: இந்திய ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15-வது ஜனாதிபதியாக வருகிற 25-ந்தேதி பதவியேற்கிறார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்தவகையில் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, வாழ்த்து தெரிவித்தனர். பழங்குடியினத்தை சேர்ந்த முதல் ஜனாதிபதி, 2-வது பெண் ஜனாதிபதி, மிகவும் இளைய ஜனாதிபதி என பல்வேறு பெருமைகளை இதன் மூலம் அவர் பெறுகிறார். மேலும் நாடு விடுதலைக்குப்பின் பிறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் திரவுபதி முர்முவையே சாரும். இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். கவுகாத்தி, ஐதராபாத், மராட்டியம், ஸ்ரீநகர், ராஞ்சி, பாட்னா, டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து, பாரம்பரிய இசை முழங்க, பட்டாசு வெடித்தும் வெற்றியை கொண்டாடினர்.

அதைபோல தமிழகத்தின் நீலகிரி வனவாசி கேந்திரத்தை சேர்ந்த கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய உடையணிந்து, பாரம்பரிய இசை முழங்க ஊர்வலமாக சென்று நேரு பூங்கா வளாகத்தில் உள்ள தங்கள் குல தெய்வம் கோவிலான அய்யனோர் அம்மனோர் கோவிலில் வழிபாடு நடத்தினர். பின்னர் அவர்கள் காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல் வழியாக வெற்றி கோஷங்களை எழுப்பியவாறு, ஊர்வலமாக சென்று பஸ் நிலையத்தை அடைந்தனர். மேலும் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை பழங்குடியின மக்கள் மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் வெற்றி தினமாக கொண்டாட உள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *