“திமுக ஆட்சியில் தில்லு முல்லு” சாலைகள் போடாமலே, ரூ.3 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது” என் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்.!

‘சாலைகள் வேலை செய்யாமலேயே சுமார் ரூ. 3 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது’ என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்தார். அவருடன், பல அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகளும் சென்றனர். அதற்கு முன்பாக, தேசிய நெடுஞ்சாலையில் ஈசநத்தம், கூம்பூர், வீரியப்பட்டி சாலைகள் உள்பட பல சாலைகளை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், “கரூர் மாவட்டத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ரூ. 170 கோடியில் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. நெடுஞ்சாலையில் வேலை செய்யாமல் பணம் எடுத்துள்ளனர். நன்றாக உள்ள சாலையை, தி.மு.க கான்ட்ராக்டர் ரோடு போடமல் சுமார் ரூ. 3 கோடி அரசு பணத்தை எடுத்திருக்கிறார். தி.மு.க ஆட்சியில் தில்லுமுல்லு நடக்கிறது.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். கரூர் மாவட்டதில் நெடுஞ்சாலை துறை, கிரசர், சவுடு மண் என திமுகவினர் கூறு போட்டு விற்று வருகின்றனர். ரூ. 140 கோடி வேலையை கான்ட்ராக்டர் ஒருவர் மட்டுமே ஒப்பந்தம் எடுத்துள்ளார். இதுகுறித்து, முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், நாங்க போராடவும் தயங்கமாட்டோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *