
புதுடில்லி: ஆங்கிலத்தில் பாடம் நடத்தப்பட்டாலும் தாய் மொழியில் தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறுவுறுத்தியுள்ளது.தாய் மொழி கற்றலை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம் என மத்திய பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி( பல்கலைக்கழக மானியக் குழு) தலைவர் ஜெகதேஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: ஆங்கிலத்தில் பாடம் நடத்தப்பட்டாலும் தாய் மொழியில் தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும். தாய் மொழி கற்றலை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். தாய் மொழியில் கற்றல், கற்பித்தல் செயல்முறையை ஆதரிப்பதில் உயர்கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.தாய்மொழி அல்லது உள்ளூர் மொழிகளில் பாடப்புத்தகங்களை எழுதுவது மற்றும் பிற மொழிகளிலிருந்து தரமான புத்தகங்களை மொழிபெயர்ப்பது உட்பட கற்பித்தலில் அவற்றின் பயன்பாட்டை ஊக்குவித்தல் போன்ற முயற்சிகளை ஊக்குவித்தல் அவசியம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் மத்திய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.