தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை ; அதிரடி காட்டும் தலைமைச் செயலாளர் – காவல்துறை எச்சரிக்கை.!

கோவை: கடந்த இரு தினங்களாக நடைபெற்று வரும் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோருடன் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கு தொடர்பாக இன்றைய தினம் 17 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கடந்த சில தினங்களாக கோவையில் நடைபெற்று வரும் சம்பவங்களில் எந்தவித உயிர் சேதமும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 400 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சில வழக்குகளில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டும், சம்பவத்தில் ஈடுபடும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் கேமராக்களில் சரியான பதிவு கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.இன்று காலை கோவையில் உள்ள 92 ஜமாத் அமைப்பினருடன் ஆலோசனை நடத்தியதாகவும் பிற்பகல் இந்து அமைப்பினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது எனவும் கூறியதுடன், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கோவையில் ஏதேனும் சம்பவத்தில் ஈடுபடும் பட்சத்தில் அது குறித்த தகவல் அளிப்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.கடந்த சில தினங்களாக கோவையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் மோதல் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுகிறது என குறிப்பிட்ட ஆட்சியர், அது போன்ற எந்த ஒரு சம்பவங்களும் நடைபெறவில்லை எனவும், இது போன்ற தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.இதை தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை மாநகரில் புதிதாக 28 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் சமூக வலைதளங்களில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் பரப்புவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *